NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி திரு தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று மார்ச் 30ஆம் தேதி காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். திருவானைக்காவல் கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா விமர்சையாக 48 நாட்கள் நடைபெருவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி அம்பாள் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்நிலையில் முன்னதாக அதிகாலை சுவாமி அம்பாளுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகர லக்னத்தில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து காலை ஏழு மணிக்கு ஜம்புகேஸ்வர ஸ்வாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேல் உள்விதி வடக்கு உள் வீதி கீழ் வீதி தெற்கு உள் வீதி ஆகிய பகுதிகளில் தேர் சுற்றி வந்து காலை 10:30 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை பத்தரை மணிக்கு மேல் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம் பிடித்து இழுத்து திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனால் திருவானைக்காவல் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பக்தர்கள் தண்ணீர் பந்தல் அன்னதானம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Posts

POST MY ADD