மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில்,
முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்வதற்காக,
இன்று 24.07.2025 மதியம் 1:30 மணியளவில் துரை வைகோ mp அவர்கள்
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின் பொறுப்பு தலைவர். Dr. ராகேஷ் ஷர்மா (Officer on Special Duty) அவர்களை,
புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்து, கோரிக்கை கடிதத்தை கொடுத்து, அதன் விளக்கத்தை எடுத்துரைத்து, அதனை விரைந்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.


துரை வைகோ அவர்களின் கோரிக்கை கடிதத்தின் விவரம் பின்வருமாறு:
NEET-PG 2025 தேர்வழுதும் தமிழ்நாடு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, நியாயமற்ற முறையில் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (National Board of Examinations in Medical Science – NBEMS) நடந்து கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தேன்.
சென்னை, மதுரை, கோவை என தேர்வெழுதும் மாணவர்கள் தங்கள் விருப்பப்பட்ட நகரங்களை தேர்வு செய்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, “முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை” (First-Come; First-Serve) என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் NBEMS தமது சொந்த விருப்பு வெறுப்பின்படி ஒதுக்கீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, இதனால் தேர்வெழுதும் மாணவர்கள் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சனைகள், நீண்ட தூர பயணங்களால் ஏற்படும் அசவுகரியங்கள், பொருளாதாரச் சுமைகளை எடுத்துரைத்தேன்.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மாணவிகளும், கிராமப்புற மாணவர்களுமே என்பதையும் குறிப்பிட்டேன்.
தமிழ்நாட்டில் 24 NEET-PG தேர்வு மையங்கள் உள்ளதால் தமிழ்நாட்டில் தேர்வெழுத விண்ணப்பித்திருக்கும் தேர்வர்களுக்கு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதையும் எடுத்துரைத்தேன்.
சென்ற 2024 ஆம் ஆண்டு இதுபோலவே தவறான தேர்வு மைய ஒதுக்கீடு செய்யப்பட்டதையும், அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் மாற்றி அமைக்கப்பட்டதையும் விளக்கினேன்.
அதுபோலவே 2025 இல் தற்போதும் நிகழ்ந்திருப்பது NBEMS கடந்த ஆண்டு உறுதியளித்ததை மீறி, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதன் நம்பகத் தன்மை மீதும் மற்றும் வெளிப்படை தன்மை மீதும் கேள்வி எழுந்துள்ளதையும் எடுத்துக்கூறினேன்.
அத்துடன் கீழ்க்கண்ட எனது நான்கு முக்கிய பரிந்துரைகளையும் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அவையாவன:
- பாதிப்புக்கு உள்ளான தேர்வர்களுக்கு உரிய தேர்வு மையங்களை உடனடியாக மறுஒதுக்கீடு செய்துதர வேண்டும் அல்லது தேர்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
- தேர்வு மைய ஒதுக்கீட்டை வெளிப்படை தன்மையோடு நகரம் வாரியாக வெளியிட வேண்டும்.
- தேர்வர்களின் ஒப்புதல் இன்றி, எந்த ஒரு தேர்வருக்கும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியே தேர்வு மையம் ஒதுக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்க வேண்டும்.
- இதுபோன்ற பிரச்சனைகள் எழும் போது உடனடியாக தீர்வு காணும் வகையில் ஒரு தனி குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட வேண்டும்.
இந்தப் பிரச்சனைகளால் ஆயிரக்கணக்கான மருத்துவர்களின் வாழ்க்கை, அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகிறது.
எனவே, எனது இந்தக் கோரிக்கைகளின் அவசரத்தை அவசியத்தை புரிந்து கொண்டு, உணர்வுபூர்வமான முறையில் இந்தப் பிரச்சனையை அணுகி, விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு NEET-PG 2025 தேர்வு மைய ஒதுக்கீட்டு செயல்முறையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் அவரது தரப்பு விளக்கங்களையும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.
எதிர்வரும் காலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு குறித்து நிரந்தர தீர்வை உருவாக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும், அதற்கு உங்கள் துறையினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் கேட்டுக் கொண்டேன். நிச்சயம் வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த கோரிக்கைக்காக, மாண்புமிகு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா அவர்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளேன் என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025க்கான தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் சரியான நடைமுறையை மேற்கொள்ளச்செய்ய எனது பணி தொடரும்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
24.07.2025
புதுடெல்லி
இவ்வாறு அக்கடிதத்தில் துரை வைகோ எம்பி அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.
மாணவர்களின் சுமை அறிந்து நீட் ரகசியம் என்று கூறி மழுப்பாமல் உண்மையாகவே மாணவர்களின் மீது உளமாற அக்கறை கொண்டு அவர்களின் நலனுக்காக உரிமை குரல் கொடுக்கும் துரை வைகோ எம்பி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.