
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார்.

விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தொகுப்பை பிரசன்னா கவனித்திருக்கிறார்.இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது. இதுவரை இல்லாத மாதிரி படத்தின் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தை இரண்டவதாக வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.மதுரையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அன்று காலை படம் வெளியாகவில்லை.சில இடங்களில நான்கு மணிக்கும் பல இடங்களில் மாலை ஆறு மணிக்கும் படம் வெளியானது.வெளியானது முதல் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.அதோடு வசூலிலும் அனைவரும் மகிழத்தக்க அளவில் இருக்கிறதாம்.நேற்று வரை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் இருபது கோடியும் பிற மாநிலங்களில் சுமார் பதினைந்து கோடியும் உலக அளவில் சுமார் பதினைந்து கோடியும் வசூல் செய்திருக்கிறதாம்.இதன்படி இதுவரை சுமார் ஐம்பது கோடியைத் தாண்டியிருக்கிறது.இன்றைய வசூல் தாண்டி இவ்வார இறுதியில் சுமார் நூறு கோடியைத் தாண்டிவிடும் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.அதைத்தாண்டி அடுத்த பெரியபடம் வருவதற்கு சில நாட்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்ததக்கது.பொதுவாக வெளியீடு அறிவிக்கப்பட்ட நாள் காலையில் படம் வெளியாகவில்லையெனில் அப்படத்துக்குப் பெரிய ஆதரவு இருக்காது என்று சொல்வார்கள்.இப்படமோ வெளியீட்டு நாள் அன்று காலை 11 மணி அளவில், இன்னும் நான்கு வாரங்களுக்குப் படம் வெளியாகாது என்கிற நிலையில் இருந்தது.அந்தக் கருத்தையெல்லாம் அடித்து உடைத்து அன்று மாலையே வெளியானதோடு வசூலிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது வீரதீரசூரன்.இரண்டாம் நாளே சுமார் ஐம்பது திரையரங்குகள் அதிகரித்த நிகழ்வும் நடந்திருக்கிறது.இதனால், நாயகன் விக்ரமின் இரசிகர்களைத் தாண்டி இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையிட்டுள்ள திரையரங்குக்காரர்கள் ஆகிய எல்லோருமே மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
