
திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது. ரூபாய் 37 கோடி செலவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் ஓடத்துறை என இரு இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய அழகிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

திருச்சி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கிடமாக ஸ்ரீரங்கம் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் காவேரி பாலம் உள்ளது. தினந்தோறும் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் காவிரியின் அழகை ரசிக்கவும் புத்துணர்ச்சி பெறவும் இங்கு மக்கள் பெரும் அளவில் கூடுவது வழக்கம். ஆனால் சத்திரம் பேருந்து நிலையம் ஸ்ரீரங்கம் இடையே பிரதான போக்குவரத்து பாலமாக இருப்பதால் பொழுதுபோக்க வருபவர்களுக்கு ஆபத்து நிறைந்ததாகவே உள்ளது.

மேலும் காவிரி படித்துறை பகுதிகள் பெரும்பாலும் புனித நீராடுவதற்கும் சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுவதால் அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத நாட்களில் நடத்தப்பட்ட சம்மர் பீச் நிகழ்வை நினைவு கூறும் திருச்சி மக்கள் காவிரியின் அழகை ரசிக்கும் வகையில் கரையோரத்தில் ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை அடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காவிரி கரையோரத்தில் வாட்ச் டவருடன் பூங்கா என்ற திட்டத்தை திருச்சி மாநகராட்சி விரைவில் செயல்படுத்த உள்ளது அதன்படி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்து றை முதல் கீதாபுரம் தடுப்பணை வரை 750 மீட்டர் தொலைவிற்கும் ஓடத்துறை மேம்பாலம் முதல் ரயில்வே பாலம் வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவிற்கும் என மொத்தம் 2.2 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த ஆற்றங்கரை பூங்காக்கள் அமைய உள்ளன.

இதில் குழந்தைகள் பூங்கா நடைபயிற்சிக்கான பாதைகள் பொதுமக்கள் மேலே ஏறி சென்று காவிரியின் அழகை ரசிக்கக்கூடிய வாட்ச் டவர் பொழுதுபோக்கு பகுதிகள் புனித நீராடுதல் மற்றும் சடங்குகள் செய்வதற்கான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெறும்.

காவிரி கரையோரம் அமையுள்ள இந்த பூங்கா திருச்சி மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மையமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.