
கரூர் மாவட்டத்தில் அகண்டு வரும் காவிரி ஆறு, மாயனூரில் உய்யகொண்டான் கால்வாயாக பிரிந்து, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஓடி, அந்தப் பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்தது.
உய்யக்கொண்டான் வாய்க்காலானது குளித்தலை வரையில் எந்தவித மாசும் ஏற்படாமல் தெளிவாக வரும் நிலையில், திருச்சி மாவட்ட எல்லையை தொட்டவுடன் கழிவுநீர் கலக்க ஆரம்பித்து விடுகிறது. ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகமணியில் உள்ள கரும்பு ஆலைக் கழிவுநீரே முதலில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகின்றது.

அதனைத் தொடர்ந்து, திருச்சி நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாநகராட்சி கழிவுற்று நிலையத்திலிருந்து சாக்கடைகள், கழிவுகள் உள்ளிட்டவை கலந்து, செந்தண்ணீர்புரம் வரும் கால்வாய் நீரில் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள், நத்தமாடிப்பட்டி மற்றும் திருவளர்ச்சிப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கழிவுநீர் கலக்கின்றன.

இதுமட்டுமல்லாது, பெல் நிறுவனக் கழிவுகள் நவல்பட்டு புதுத் தெரு அருகே கலக்கின்றன. சாக்கடை நீர், கழிவுகள் கலப்பதன் காரணமாக, மாசு அடையும் உய்யக்கொண்டான் வாய்க்கால் கறுப்பு நிற ஓடுகிறது.
இதனால், நிலத்தடி நீரும் பெரிதும் மாசடைந்து, வாய்க்கால் நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன.
அந்த வாய்க்கால் தண்ணீரை விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், பல்வேறு கழிவுகளும் கலந்ததன் காரணமாக, தற்போது மக்கள் அந்த நீரைப் பயன்படுத்தாமல் உள்ளனர்.
இதைக் கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் நடத்தியும், அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடைபெற்று தீர்வு காணாமல் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதால் நிலமும், நிலத்தடி நீரும் மாசு அடைவது காரணமாக, பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இப்போதாவது விழித்துக் கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.