
தூய பவுல் பள்ளி 1716ம் ஆண்டு கிறித்தவ குருமார்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் உயர்நிலை பள்ளியாகவும் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி வாழ் மக்களுக்கு கல்வி சேவை ஆற்றி வருகிறது.
இப்பள்ளியில் பயின்ற பலர் அரசாங்க துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இன்றும் பலர் பல உயர் பதவிகளை வகித்து இப்பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். பலர் ஆசிரியப் பணி ஏற்று சிறந்த மாணவர்களை உருவாக்கி சேவை செய்து வருகின்றனர்.

இப்பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் பள்ளியின் பள்ளியின் குறிக்கோளான “அன்பும் தொண்டும்” என்பதனை மனதிற்கொண்டு மாணவர்களுக்குப் பொறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். “கற்க கசடற” என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப மாணவர்களுக்குத் தெளிவாகவும் புரியம்படியும் கல்வி கற்பித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 1956 முதல் 1965 ம் ஆண்டு வரை 3ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு (S S L C) வரை படித்த நாங்கள் பெருமையடைகிறோம். “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்” என்பது தெய்வப் புலவரின் கூற்று. அதற்கேற்ப நாங்கள் பள்ளியிலிருந்து சென்று 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் (Diamond Reunion) வைர விழாவினை 16-62025 அன்று பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விழாவிற்கு அனுமதி தந்து, தேவையான அனைத்து வசதிகளையும் உதவிகளையும் செய்து தந்த இப்பள்ளியின் தாளாளர் (Correspondant) அவர்களுக்கும் தலைமை ஆசிரியர் (Headmaster), உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விழாவினை புகைப்படம் மற்றும் காணொளி சேவைகள் மூலம் சிறப்பித்துத்தந்த தலைமை செயலகத் தலைமை நிருபர் (Head Reporter) திரு. அந்தோணி அருளப்பா அவர்களுக்கும் மற்றும் ஏனைய செய்தியாளருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது பணியாற்றி வரும் அனைவருக்கும் மற்றும் படித்துவரும் மாணவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பண்புடன் விளங்கும் பவுல் பள்ளியின் புகழினைப் பரிவுடன் ஓங்க செய்வோம்.
