சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ அவர்களை பேட்டி கண்டார் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தியாளர் திரு கார்த்திகேயன் அவர்கள்.

மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சி அது என்று குறிப்பிடாமல் இருக்க முடியாது. இன்றைய ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு துரை வைகோவுடன் இந்த பேட்டி என்பது மிக மிக முக்கியமான ஒரு பேட்டியாகும். ஒரு விருந்தினரை எப்படி அணுக வேண்டும் அந்த விருந்தினரிடம் எப்படிப்பட்ட கேள்விகளை முன் வைக்க வேண்டும் அந்த விருந்தினரை எப்படி பேச வைத்து அவரிடம் இருந்து உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்கின்ற ஒரு விஷயத்தை புதிய தலைமுறை கார்த்திகேயன் அவர்கள் மிக மிக சிறப்பாக செய்திருக்கிறார் என்பது என்னுடைய எண்ணம். முதற்கண் அவருக்கு என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
துரை வைகோ போன்ற ஒரு அரசியல்வாதியிடம் முன்வைக்கக்கூடிய கேள்விகளாக அவருடைய கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரங்களை குறிப்பாக திரு துரை வைகோ அவர்களுக்கும் திரு மல்லை சத்யா அவர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற அந்த பிரிவையும் அதன் நீட்சியாக தொடரும் குற்றச்சாட்டுகளையும் திரு கார்த்திகேயன் அவர்கள் மிக அழகாக தெளிவாக கேள்விகளாக திரு துரை வைகோ அவர்களிடம் முன் வைத்தார். திரு துரை வைகோ அவர்களும் மிக மிக நேர்மையான முறையிலும் எந்த விதமான ஒளிவு மறைவும் இன்றி தன் பக்கத்து நியாயங்களை மிகத் தெளிவாகவும் கம்பீரமாகவும் திரு கார்த்திகேயனுக்கு விளக்கம் அளித்தார்.

இன்றைய இளம் செய்தியாளர்களுக்கு வேண்டுமானால் மறுமலச்சி திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய வரலாறு தெரியாமல் இருந்திருக்கலாம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி உருவானது அந்த கழகம் உருவாவதற்கான காரணிகள் என்னென்ன திரு வைகோ அவர்களுக்காக உயிர் தியாகம் செய்த தொண்டர்களை பற்றி இன்றைய இளம் ஊடக சகோதரர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் திரு கார்த்திகேயன் போன்ற மிகப் படித்த ஊடக உலகில் அனுபவம் வாய்ந்த பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் நன்கு அறிந்த ஒரு ஊடகவியலாளருக்கு தெரியாமல் இருக்காது.
அன்றைக்கு திரு வைகோ அவர்களுக்கும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்தமிழ் அறிஞர் மு கருணாநிதி அவர்களுக்கும் இடையில் எப்படி ஒரு பனிப்போர் உருவாகியதோ எதற்காக உருவாக்கியதோ அதே பனிப்போர் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் உருவாகி இருக்கின்றது.
அதற்காக திரு வைகோ அவர்களும் மலை சத்தியா அவர்களும் சரிசமம் என்று கூறி விட முடியாது. திரு வைகோ அவர்களின் அரசியல் பயணம் என்பது ஒப்புயர்வற்றது. இன்று வரை அரசியலில் தூய்மையும் பொது வாழ்வில் நேர்மையையும் ஒருங்கே கடைப்பிடித்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல பறந்து விரிந்த ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் அத்தனை அரசியல் தலைவர்களிடமும் நன்மதிப்பையும் நட்பினையும் பெற்ற ஒரே அரசியல்வாதி என்றால் அது திரு வைகோ அவர்கள்தான் என்பதில் நிச்சயமாக எவருக்கும் மாற்று கருத்தே இருக்காது இருக்கவும் முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினராக திரு வைகோ அவர்கள் பாராளுமன்றத்தில் சிங்க நிகர் கர்ஜனை குரலில் ஓங்கி உரையாற்றிய ஒவ்வொரு சம்பவங்களும் இன்றைக்கும் அன்றைய அரசியலை அறிந்த அனைவருக்கும் நீங்காத நினைவுகளாக மனதில் இருக்கும். ஆனால் திரு மல்லை சத்யா அவர்களை அப்படி நாம் எந்த இடத்திலும் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு அடுத்தபடியாக தொண்டர்களிடம் கம்பீரமாக ஒலித்த ஒரே பெயர் திரு வை கோபால்சாமி அவர்களின் பெயர் தான். கலைஞர் மு கருணாநிதிக்கு அடுத்தபடியாக தலைவராக தொண்டர்கள் மனதார ஏற்றுக்கொண்டதும் திரு வைகோ அவர்களைத்தான். இந்த சூழலில் தன்னுடைய மகன் ஸ்டாலினுக்கு அரசியலில் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமோ என்று பயந்த திரு மு கருணாநிதி அவர்கள் திரு வைகோ மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் என்பது நாடறியும். குறிப்பாக திரு வைகோ அவர்கள் தன்னை கொல்ல முயன்றதாகவும் கூட கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் கார்த்திகேயன் அறிந்திருக்கவில்லையா அல்லது அறிந்திருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மீதும் உள்ள பற்றுதலின் காரணமாக அவற்றையெல்லாம் மறந்துவிட்டது போல நடிக்கின்றாரோ என்கின்ற ஐயம் எனக்குள் தோன்றுகின்றது.
ஒரு ஊடகவியலாளர் என்பவர் எந்த விதமான அரசியல் இன மொழி மத சாதி விருப்பு வெறுப்புகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தின் ஊடக தர்மத்தை பேணி காக்க வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. இந்த கடமையை திரு கார்த்திகேயன் அவர்கள் மறந்தது ஏனோ?
இன்றைக்கு திரு துரை வைகோ அவர்களிடம் கடினமான கேள்விகளை முன் முன்வைக்கும் திரு கார்த்திகேயன் இதே கேள்விகளை திரு ஸ்டாலின் அவர்களிடம் கேட்பதற்கு அவருக்கு துணிவு இருக்கின்றதா? இன்றைக்கு மல்லை சத்யாவிற்கு ஏற்பட்ட நிலைதான் அன்றைக்கு வைகோ அவர்களுக்கு ஏற்பட்டது. மல்லை சத்யாவை விட அதிக அளவில் காயங்களையும் வலிகளையும் உணர்ந்தவர் திரு வைகோ அவர்கள். கட்சியிலிருந்து வைகோ அவர்கள் வெளியேற்றப்பட்டவுடன் அவருக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட தொண்டர்களை சாட்சியாக வைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற கட்சியினை தொடங்கி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியை வளர்த்து வருகின்றார் திரு வைகோ அவர்கள். இடையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணியில் இருந்த அவர் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் சங்கமித்து இன்று வரை கூட்டணி தர்மத்தை எள்ளளவும் மீறாமல் அதே நேரம் தனது கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காமல் மிகவும் கண்ணியமாக நடந்து வருகின்றார்.
2024 பாராளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு திரு துரை வைகோ அவர்களின் பெயரை பரிசீலனை செய்த பொழுது திருச்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் நிச்சயமாக அவர் பெயரை வழி மொழிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் திரு துரை வைகோ அவர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் களமிறங்கி சுயேசையாக தீப்பெட்டி சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு பெரும் தூண்களான அமைச்சர்கள் திரு கே என் நேரு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் கடின உழைப்பும் அவர்களின் ஆதரவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களின் கடின உழைப்புமே திரு துரை வைகோ அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற அந்தஸ்தை உருவாக்கித் தந்தது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் மற்ற கூட்டணி கட்சியின் எம்பிக்களைப் போல அவர் எங்குமே திராவிட முன்னேற்றக் கழகத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் மிகத் திறமையாக தன்னுடைய உழைப்பினை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு இன்றளவும் செய்து வருகின்றார். கட்சி பேதம் பார்க்காமல் தன்னை நாடி வந்து உதவிகள் கேட்கும் அனைவருக்குமே திரு துரை வைகோ அவர்கள் உடனுக்குடன் உதவிகளை செய்து வருகின்றார். மக்கள் பணியாற்றுவதில் மிகச்சிறந்த நாடாளுமன்ற வாதி யாக திகழ்ந்து வருகின்றார். ஆனாலும் அவரின் மக்கள் பணிகளை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதற்கு எந்த ஊடகங்களும் இன்றுவரை தயாராகவே இல்லை. அதையும் மீறி எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று கீதையில் கண்ணன் சொல்லிய வார்த்தைகளை உள்வாங்கி தன்னுடைய கடமைகளை செய்து வரும் துரை வைகோ அவர்கள் மீது புதிய தலைமுறையின் திரு கார்த்திகேயன் அவர்கள் இன்று சேற்றை வாரி இறைப்பது என்பது மிக மிக தவறான ஒரு செயல் ஆகும்.
ஒரு கட்சியின் உட்கட்சி பிரச்சனையில் ஊடகங்கள் தலையிடுவது எந்த வகையில் நியாயம்? திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி பூசல்களை கிடையாதா? அந்த உட்கட்சி பூசல்களில் இந்த கார்த்திகேயன்களும் மற்றவர்களும் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதற்கு தயாராக இருக்கின்றார்களா என்பது பொதுமக்களின் மில்லியன் டாலர் கேள்வி.
அந்த பேட்டியின் இடையில் திரு கார்த்திகேயன் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட போராட்டத்தை குறிப்பிட்டு கட்சியின் வளர்ச்சிக்காக மகனின் முன்னேற்றத்திற்காக திரு மல்லை சத்யா அவர்களை திரு வைகோ அவர்கள் குற்றம் கூறி கட்சியிலிருந்து விலக்க பார்க்குகின்றார் என்று கூறுகின்றார். திரு கார்த்திகேயன் அவர்கள் இது எந்த வகையான நியாயம் என்பது எனக்கும் தெரியவில்லை திரு துரை வைகோ அவர்களுக்கும் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கச்சி பூசலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலும் ஒன்றா நிச்சயமாக கிடையாது. திரு துரை வைகோ அவர்கள் எந்த அளவிற்கு தொண்டர்களையும் தலைவர்களையும் தனக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த தொகுதி மக்களையும் மதிக்கின்றார் என்பதை அவரோடு நெருங்கி பார்த்தால் அனைவருக்கும் புரியும். செய்தியாளர்கள் எவ்வளவு எடக்குமடக்காக கேள்விகள் கேட்டாலும் திருமண துரை வைகோ அவர்கள் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தாமல் அதே நேரம் மிகவும் கண்ணியமாக நியாயமான முறையில் பதிலை அளிப்பதோடு தன்னை கேள்வி கேட்ட அந்த செய்தியாளர்களை பாராட்டவும் அவர் தயங்குவதில்லை. பலமுறை இதை நானே கவனித்திருக்கின்றேன்.
நான் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளனும் கிடையாது. ஆனால் இப்பொழுது நான் திரு துரை வைகோ அவர்களின் ஆதரவாளன் என்று கூறிக் கொள்வதில் நெஞ்சை நிமிர்த்தி கர்வத்தோடு நிற்கத் தோன்றுகின்றது காரணம் பொய்யும் பித்தலாட்டமும் வஞ்சமும் சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் உலகில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் துணிவும் ஒருங்கே பெற்ற திரு துரை வைகோ போன்ற தலைவர்கள் உருவாவது என்பது எதிர்கால தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதே எனது எண்ணம்.
திரு கார்த்திகேயன் போன்ற மெத்த படித்த அனுபவிக்க ஊடகவியலாளர்கள் ஒரு கட்சி சார்ந்து அல்லது ஒரு தலைவரை சார்ந்து இருக்காமல் நடுநிலையோடு நேர்மையாக கண்ணியத்தோடும் மன உறுதியோடும் ஊடக தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதே என்னை போன்ற சிறு ஊடகவியலாளர்களின் கோரிக்கை ஆகும்.
நன்றி
வணக்கம்
ஜெய் ஹிந்த்