வனவிலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக, பல்வேறு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட Human Wildlife Conflict கூட்டம், புதுடெல்லியில் உள்ள Constitution Club of India கூட்டரங்கத்தில் நேற்று (22.07.2025) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ உடன் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கே.சி. வேணுகோபால் மற்றும் திரு. கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
துரை வைகோ mp அவர்களை அறிமுகப்படுத்தியபோது, “குரலற்றவர்களின் குரலாகக் கடந்த 61 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் திரு வைகோ அவர்களின் இயக்கத்தின் சார்பாக, அவரது மகன் திரு. துரை வைகோ கலந்துகொண்டுள்ளார். இயற்கை ஆர்வலரான அவரது தொடர் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் மதிக்கத்தக்கது” எனக் குறிப்பிடப்பட்டது. தலைவரை குறிப்பிட்ட இந்த அறிமுகம் பெருமை தரும் பதக்கமாக அமைந்தது.
இக்கூட்டத்தில் துரை வைகோ உரையாற்றியபோது, மாநில அரசுகள், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் கொண்டுவந்துள்ள வனவிலங்கு சட்டங்களும் திருத்தங்களும் சிறப்பாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட முடியும் என்பதால், தன்னிச்சையாக செயல்படுத்த இயலாத நிலை உள்ளதை எடுத்துரைத்தார்.
மேலும், 40 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இச்சட்டங்கள் இன்றைய காலகட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாதவையாக உள்ளன எனவும், இதனால் எவ்வித பயனும் இல்லை எனவும் விளக்கினார்.
இதற்கு ஒரே தீர்வாக, இவ்விரு சட்டங்களிலும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு உரிய குழுவை அமைத்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தும் முன்னெடுப்புகளை இக்கூட்டம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தவிர்க்கவும், வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்யவும், பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவதுடன், காட்டுப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் சட்டத் திருத்தங்கள் அவசியம் என விரிவாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக, புற்கள் வகைகளும், மூங்கில்களும் இன்னும் வனவிலங்கு உண்ணும் மரம் செடி, கொடிகளை அகற்றிவிட்டு வனத்துறையினர் தேக்கு (Teak) மரங்கள், வட்ட (wattle) மரங்கள், யூகலிப்டஸ் (eucalyptus) மரங்களை பயிரிட்டு வளர்ப்பதாலும், தனியார், தேயிலைத் தோட்டங்களையும் காபி எஸ்டேட்டுகளையும் அமைத்ததாலும், காட்டை அழித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் வனவிலங்குகள் உணவு தேடி மக்கள் வசிப்பிடத்திற்கு வருகின்றன.
இதனை தடுக்க காடுகளை அகற்றும் நிறுவனங்களை தடுக்க கடுமையான சட்டங்களை வகுப்பதுடன், வனவிலங்குகள் உண்ணும் வகை மரங்களை காடுகளில் பயிரிட அரசு முன்வர வேண்டும் என்றும், இதனால் வனவிலங்கு மனிதன் மோதிக் கொள்ளும் போக்கு ஓரளவாவது தடுக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளைப் பட்டியலிட்டதுடன், இவை மூலம் காட்டுப்பன்றிகளை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதையும் விளக்கினார்.
இதற்கு தீர்வாக, காட்டுப்பன்றிகளை ‘தீங்கு விளைவிக்கும் விலங்கு’ (vermin) எனப் பட்டியலிட்டு, எவ்வித சட்டக் கட்டுப்பாடுகளுமின்றி அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.