New Trichy Times

Current Date and Time
Loading...

கண்‌ மருத்துவத்தில் ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி,கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை,எளிய,சாதாரண நடுத்தர மக்களுக்கு,உயர்தர கண் மருத்துவ சிகிச்சைகளை,எந்த விதமான பாகுபாடுகளும்,எந்த விதமான லாப நோக்கங்களும் இன்றி இன்று வரையிலும் செய்து வரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமான அரவிந்த் கண் மருத்துவமனையை உருவாக்கியவர்களுள் ஒருவரான மருத்துவர் பத்மஶ்ரீ திரு.நம்பெருமாள்சாமி அவர்கள் மறைந்து விட்டார்.

தேனி அருகே அம்பாசமுத்திரம் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த மருத்துவர் நம்பெருமாள்சாமி,கண் மருத்துவப் படிப்பில் உயர் கல்வியை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்தவர்.

மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் கண் மருத்துவராகத் தன் மருத்துவப் பணியைத் தொடங்கிய மருத்துவர் நம்பெருமாள்சாமி,1967 ல் இந்தியாவின் முதல் குறைபார்வை உதவி மையத்தை ராஜாஜி மருத்துவமனையில் துவக்கினார்.அதன் மூலமாக பார்வைக் குறைபாடுகள் கொண்ட பலருக்கு சிகிச்சைகளைத் தந்தார்.பின்,அதே காலகட்டத்தில் கண் மருத்துவத்தை ஒரு மக்கள் சேவையாக செய்யும் உயர்ந்த இலட்சிய நோக்கில் துவங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

குறை பார்வை,விழித்திரை நீரழிவு தொடர்பாக ஆராய்ச்சிகள்,சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகளைத் தருவதில் மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களின் பங்கு அளவிட முடியாதது.

கண் மருத்துவத் துறையில் இவரது அளப்பரிய பங்கை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருதை 2007 ல் வழங்கியது.

புகழ்பெற்ற டைம்ஸ் இதழ் 2010 ல் வெளியிட்ட,உலகின் தலைசிறந்த 100 மனிதர்கள் என்ற பட்டியலில் மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களுக்கு ஒரு இடம் தந்து பெருமைப்படுத்தியது.

கண் மருத்துவத்துறையில் உலக அளவில் வழங்கப்படும் பல பெருமைமிகு விருதுகளை பெற்ற மருத்துவர் நம்பெருமாள்சாமி தன் இறுதிக் காலம் வரையிலும் கண் மருத்துவத்தில் தன் பங்களிப்பைத் தந்து கொண்டிருந்தார்.

மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசும் பெரும் வாய்ப்பை நான் பலமுறை பெற்றிருக்கிறேன்.அரசியல் பொது வாழ்வில் நான் அடியெடுத்து வைத்த வேளையில்,ஏழை, எளிய,சாதாரண மக்களுக்காக உழைக்கும் வகையில் உங்கள் அரசியல் பணி சிறப்பாக இருக்க வேண்டும் என அவர் உளமார வாழ்த்தியதை இந்தத் தருணத்தில் உணர்வுப் பூர்வமாக நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அன்னாரது மறைவு கண் மருத்துவத்துறையில் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விழித்திரை நீரழிவு,குறை பார்வை போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று, முழுவதும் குணமடைந்து, தங்கள் பார்வைத் திறனை மீண்டும் பெறும் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியிலும் மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களே நிறைந்திருப்பார்.

துரை வைகோ

நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)

முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக

24/07/2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD