
அவதூறுகளை நான் எப்போதும் பொருட்படுத்தியவனல்ல; ஆனால், எனக்கு கிடைக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள் மற்றும் நன்றிகளால், என் மீது எய்யப்படும் அவதூறு அம்புகள் முனை மழுங்கி வீழ்வதை நான் என் கண்ணெதிரே காண்கிறேன்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்க, நேற்று (21.07.2025) புதுடெல்லியில் உள்ள எனது இல்லத்திற்கு வந்திருந்தபோது, வாழ்த்து மடல்கள், பாராட்டுப் பத்திரங்கள், நன்றி தெரிவிக்கும் கடிதங்கள் என் கவனத்திற்கு வந்தன.ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக இருக்கட்டும், தாழ்த்தப்பட்ட தலித் மக்களாக இருக்கட்டும், அவர்களின் உரிமைகளுக்காக எனது கடமை சற்று கூடுதலாகவும், வீரியமாகவும் உள்ளதை நான் அறிவேன்; அந்த மக்களும் அறிவார்கள்.அவர்களில் ஒருவரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. ஹெச்.ஆர். கான், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து நான் தெரிவித்த கடுமையான கண்டனங்களைச் சுட்டிக்காட்டி, ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் சார்பில் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர், “வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிரான உங்கள் தெளிவான குரல், முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பேண உதவியுள்ளது” என்றும், அச்சமுதாயத்திற்கு வழிகாட்டி ஆதரவளிக்கும் இடத்தில் நான் இருப்பதாகவும் எழுதியிருப்பது என் மனதிற்கு நிறைவைத் தந்தது. இது, எனக்கு கூடுதல் பொறுப்பு மிக்க எதிர்காலத்தை உணர்த்துகிறது.மேலும், Indian Muslims for Civil Rights (IMCR) அமைப்பின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. முகம்மது அதீப் அவர்களின் கடிதமும் எனக்கு மேலும் வலிமை அளித்தது. அவர், “வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான உங்கள் போராட்டம், இந்திய சிறுபான்மை மக்களின் நலனுக்கும் நல்வாழ்வுக்கும் வழங்கப்பட்ட வரலாற்றுப் பங்களிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்தப் பணிக்காக உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் கடன்பட்டுள்ளனர்” என்று அவர் கூறியது, எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை வழங்கியது.இவ்விருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என்றென்றும் உறுதுணையாக நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன்.இந்த நேரத்தில், வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நான் ஆற்றிய பணிகளை எண்ணிப் பார்க்கிறேன். கடந்த 02.04.2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து, அன்று நள்ளிரவு நான் ஆற்றிய எதிர்ப்புரை, என் இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டது. அப்போது, “இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாத் வ அக்ரளுல்லாஹ கர்ளன் ஹஸ்னன் யுளா அஃபு லஹும் வலஹும் அஜ்ருன் கரீம்” என்று அரபி மொழியில் திருக்குர்ஆன் வசனம் 57:18-ஐ உரக்க ஓதி, “ஏழை எளிய ஆதரவற்றோருக்கு தானதர்மம் உள்ளிட்ட தொண்டுகளை செய்வது, இறைவனுக்கே கடன் கொடுப்பதற்கு சமமானது என்பதுதான் இதன் பொருள்” என்று அதன் விளக்கத்தையும் எடுத்துரைத்தேன். இந்திய நாடாளுமன்றத்தில் திருக்குர்ஆன் வசனத்தை ஓதிய ஒரே நபர் அன்று நானாகவே இருந்தேன்.மறுநாள் (03.04.2025) அதிகாலை நடைபெற்ற வாக்கெடுப்பில், வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக எனது வாக்கை எதிர்ப்பு உணர்வோடு அழுத்தமாகப் பதிவு செய்தேன். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எனது கண்டனங்களை வலுவாகப் பதிவு செய்தபோதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்தச் சட்டம் நிறைவேறியதை எதிர்த்து, எனது தொடர் போராட்டம் தொடர்ந்தது.“நமது வக்ஃபு; நமது உரிமை” என்ற முழக்கத்துடன், ஜமாஅத்துல் உலமா சபை முன்னெடுத்த நாடு தழுவிய கண்டனப் பொதுக்கூட்டங்கள், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், 13.04.2025 அன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்றன. இந்த இரு கூட்டங்களிலும் பங்கேற்று, கண்டன உரைகள் ஆற்றி, என் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தங்கள் எம்பி உறுதுணையாக நிற்கிறார் என்ற நம்பிக்கையை வழங்க விரும்பினேன். நான் எண்ணியதைப்போலவே, புதுக்கோட்டை மற்றும் திருச்சி கண்டனப் பொதுக்கூட்டங்களில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் முன்பு, எனது நாடாளுமன்ற உரையையும், அதையொட்டிய நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி, மீண்டும் திருக்குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டினேன். அப்போது எழுந்த கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது. அன்று, ஆனந்தக் கண்ணீருடன் என் தொகுதி மக்கள் முன்பு உணர்வோடு பேசியதை இன்று எண்ணிப் பார்க்கிறேன். அதற்கடுத்து, 26.04.2025 அன்று, தமிழ்நாடெங்கும் மறுமலர்ச்சி திமுக ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகரில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைத்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இயற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, அதனை ரத்து செய்ய வலியுறுத்தி, உணர்வோடு உரையாற்றினேன்.இன்று, எனக்கு கிடைத்த வாழ்த்து, பாராட்டு, நன்றி மற்றும் நம்பிக்கை நிறைந்த கடிதங்கள் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. அவதூறுகளை குப்பைத் தொட்டியில் வீசி, எப்போதும் போல், ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உற்ற தோழனாக, உறுதுணையாக நிற்பேன். அவர்களின் குரலாக, நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஓங்கி ஒலிப்பேன் என்று மீண்டும் உறுதியேற்றேன்.அன்புடன்துரை வைகோநாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)முதன்மைச் செயலாளர்மறுமலர்ச்சி திமுக22.07.2025புதுடெல்லி#DuraiVaiko #MDMK #Vaiko #trichymp #Waqf