எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (31.07.2025) காலை 10 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றது.
அதில் வாக்குரிமை திருட்டு Special Intensive Revision – SIR பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று ஒத்த குரலில் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டும், இன்றுவரை ஆளும் பாஜக அரசு அதனை கண்டு கொள்ளாமல் ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் ஜனநாயக மாண்பை காப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்றுபட்டு நின்று செயல்படுவது என்றும், தொடர்ந்து பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து இரு அவைகளிலும் இது குறித்த விவாதத்திற்கு அனுமதி பெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மறுமலர்ச்சி திமுக சார்பில் பங்கேற்று நான் பேசுகையில், சிறுபான்மை மக்களின் வாக்குகள் பறிப்பு, போலி வாக்காளர் சேர்ப்பு ஆகிய மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தேன்.
இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் மக்கள் மன்றத்திற்கும் எடுத்துச் சென்று இதன் வீரியத்தை மக்களிடம் எடுத்துரைப்பது நமது கடமை என்றும் பேசினேன்.
அதன் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று SIR பற்றி அவையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்தை எழுப்பினேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
31.07.2025
புதுடெல்லி