New Trichy Times

Current Date and Time
Loading...

மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (04.08.2025) காலை 12 மணியளவில், அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன்.

ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர, 15 அரசியல் கட்சிகளைச் சார்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களிடம் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினேன்.

அக்கடிதத்தில், தாமதத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துரைத்து, அவர்களை உடனடியாக மீட்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.

கிஷோர் சரவணன் மட்டுமல்ல, அதிகாரப்பூர்வமாகவே 126 இந்தியர்கள் ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்கச் செய்ய வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினேன். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடிச் சென்று, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,

இந்தியர்களை போருக்கு அனுப்புவது, இந்தியா-ரஷ்யா இடையேயான வெளியுறவுத்துறை ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்பதைதும் சுட்டிக்காட்டினேன். இவ்வாறு இந்தியர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளித்து போருக்கு அனுப்புவது முற்றிலும் தவறான செயல் என்பதையும் அழுத்தமாக எடுத்துரைத்தேன்.

இதுகுறித்து, நான் ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்ததையும், நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க குரல் கொடுத்ததையும், வெளியுறவுத்துறை செயலாளரைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்ததையும் தெரிவித்தேன்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர் அவர்கள், ரஷ்யாவில் சிக்கிக்கொண்டுள்ள அனைத்து இந்தியர்களை மீட்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவை மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்து இந்தியர்களையும் குறிப்பாக நமது கிஷோர் சரவணனை தாயகத்தில் நேரில் சந்திக்கும் அந்த நல்ல நாளுக்காக இறைவனை / இயற்கையை வேண்டி காத்திருப்போம்.

அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
04.08.2025
புதுடெல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD