
ஒன்றியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களை, இன்று (05.08.2025) நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.
அந்தச் சந்திப்பில், எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான இரு முக்கிய கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அமைச்சரிடம் வழங்கி, அவை குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.
கோரிக்கைகளின் விவரம்:
கோரிக்கை 1:
கடந்த 14.12.2016 அன்று நடைபெற்ற பணியாளர்களுக்கான மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) 206-வது கூட்டத்தில், சேலம் மண்டலத் துணை அலுவலகத்தைப் பிரித்து, திருச்சியில் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.
எனினும், ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும், ESI சட்டத்தின் கீழ் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான், திருச்சியின் புவியியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது என்றும், இங்கு மண்டலத் துணை அலுவலகம் அமைப்பது, சுமார் 2.5 லட்சம் பணியாளர்கள் உள்ளிட்ட 10 லட்சம் பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், 12,000 முதல் 15,000 தொழில் நிறுவனங்களுக்கு உரிய சேவைகளை வழங்கவும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டேன்.

மேலும், டெல்டா பகுதியில் (அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர்) புதிய கிளை அலுவலகங்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவை செயல்படுத்தப்படவில்லை. இம்மாவட்டங்கள் திருச்சி மண்டலத் துணை அலுவலகத்தின் கீழ் வருவதால், திருச்சியில் மண்டலத் துணை அலுவலகம் அமைப்பது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.
கோரிக்கை 2:
திருச்சி ESI மருத்துவமனை, தற்போது 50 படுக்கைகளுடன் இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டி, இது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தேன்.
எனினும், இந்த மருத்துவமனையில், சிறப்பு மருத்துவர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை என்பதை எடுத்துரைத்தேன்.
எனவே, இம்மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தவும், தேவையான மனிதவளம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினேன்.
இவ்விரு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றிட, அமைச்சர் அவர்களின் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி, திருச்சியில் மண்டலத் துணை அலுவலகத்தைத் திறப்பதற்கும், ESI மருத்துவமனையை 100 படுக்கைகளுடன் தரம் உயர்த்துவதற்கும் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
அமைச்சர் அவர்கள், இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து, விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
05.08.2025
புதுடெல்லி
