
நான் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த 22.05.2025 அன்று நடைபெற்ற, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
அந்த விழாவில், திருச்சி உய்யகொண்டான் திருமலையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான கேப்டன் S. இருதயசாமி என்ற பெரியவர் அவர்கள் தற்போது பணியில் உள்ள இராணுவ வீரர்களுக்கான இரயில் பயண முன்பதிவு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுமென பொது வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். தற்போதைய ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும், இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போது நான் பேசுகையில், “இராணுவ வீரர்கள் இல்லையெனில் நாடு இல்லை; நாடு இல்லையெனில் நாம் இல்லை” என்று குறிப்பிட்டு, இந்தக் கோரிக்கையை ஒன்றிய இரயில்வே அமைச்சரிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றுவதற்கு எனது முழு முயற்சியையும் மேற்கொள்வேன் என உறுதியளித்தேன்.
அதன்படி, கடந்த 27.05.2025 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கு இந்தக் கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தேன்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (08.08.2025) மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, இது தொடர்பான கோரிக்கைக் கடிதத்தை அளித்தேன்.
கடிதத்தில், பணியிலிருந்து விடுமுறைக்காகச் சொந்த ஊர் செல்லும் இராணுவ வீரர்களும், விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் வீரர்களும் இரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டேன். இதனால், அவர்கள் உரிய நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாமல், பணியிடங்களுக்கு தாமதமாகத் திரும்புவதால் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தேன்.
இராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையையும், தியாகங்களையும் கருத்தில் கொண்டு, இரயில் பயணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு அளிக்க இரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.
மேலும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இராணுவ வீரர்களுக்கு உரிய நேரத்தில் பயணச்சீட்டு உறுதிப்படுத்த எளிய முறையை உருவாக்கலாம் என ஆலோசனை வழங்கினேன். இதன்மூலம், அவர்களின் கண்ணியம் பேணப்படுவதுடன், உரிய நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு, இராணுவ வீரர்களை கண்ணியமாக நடத்துவதற்கான இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
08.08.2025
புதுடெல்லி