NTT TAMIL

Current Date and Time
Loading...

மனம் நெகிழ்ந்தேன்! மகிழ்ந்தேன் நன்றி தெரிவிக்கிறேன்!

ஆண்ட கட்சியும் அல்ல, ஆளுகிற கட்சியும் அல்ல. தேர்தல் களங்களில் பல தோல்விகளையும், பல சோதனைகளையும் சந்தித்த ஒரு இயக்கம். ஆனால், தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு உத்தமத் தலைவருக்கு தோள் கொடுத்து அணிவகுப்போம், அவர் கரங்களுக்கு வலு சேரப்போம் என 32 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இப்பயணத்தை தொடங்கினோமோ, அதே உறுதியோடு இன்றும் சங்கமித்த பெருங்கூட்டத்தைக் கண்டு, அரசியல் உலகம், பொதுமக்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவரும் திகைத்து வியக்கும் வண்ணம் திருச்சி சிறுகனூர் நேற்று (15.09.2025) திக்குமுக்காடியது.

இயக்கத் தோழர்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஊட்டி, முழு மனநிறைவுடன் நடைபெற்று முடிந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநாட்டில் கலந்து கொண்ட, அதன் வெற்றிக்கு உழைத்திட்ட யாவரையும் போற்றிடும் என் இதயத்துள் என்றும் நிறைந்துள்ள எண்ணிலா நன்றிகளுடன், இயற்கைக்கும் இறைவனுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்.

செப்டம்பர் என்றாலே திராவிட இயக்கத்தின் மூன்று முக்கிய தலைவர்கள் பிறந்த மாதம். அதில், 15-ஆம் தேதி, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளை, ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவாக, மாபெரும் மாநாடாக தொன்றுதொட்டு நாம் கொண்டாடி வருகிறோம்.

அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பிரம்மாண்ட மாநாடு திருச்சியில் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்ட நாள் முதல் இந்த நொடி வரை, இதற்காக உழைத்த கழக நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள், கண்கவர் மேடையை அமைத்த பந்தல் சிவா அவர்கள், ஒளி-ஒலி அமைப்பை மிளிரச் செய்த வாசுகி நிறுவனத்தார், மாநாட்டுத் தகவல்களை செய்தியாகவும், நேரலையாகவும் வெளியிட்ட அனைத்து பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள், மாநாட்டு அமைப்பிற்கு பலவகைகளில் பங்களித்த ஒப்பந்ததாரர்கள், மிக மேலான ஒத்துழைப்பு நல்கிய காவல் துறையினர் மற்றும் இந்த மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்த இயற்கைக்கும், இறைவனுக்கும் என் இதயத்தின் அடிஆழத்திலிருந்து கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்து, என் தலைவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

மாநாட்டு திடலை உறுதி செய்த நாள் முதல், மூன்று முக்கிய வானிலை ஆய்வாளர்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தேன்.

செப்டம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் மழைக்கு வாய்ப்பில்லை என உறுதி செய்து, மாநாட்டு பணிகளைத் தொடங்கினோம். தலைவர் பேசி முடிக்கும் நேரம் வரை, அனைவரும் புறப்படும் அந்த நொடி வரை, வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து கவனித்தேன்.

தலைவர் வைகோ அவர்கள் மாநாட்டு திடல் முழுமைக்கும் பந்தல் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். கழகத்தின் நிதிப் பற்றாக்குறை, கடந்த மாதம் நடத்தப்பட்ட மண்டலவாரியான செயல் வீரர்கள் கூட்டங்கள், தலைவர் கலந்து கொண்டு பேருரையாற்றிய எட்டு பொதுக்கூட்டங்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் இதர பொறுப்புகள், மற்றும் கட்சியின் கையிருப்பு பணமின்மை ஆகியவற்றால், முழு பந்தல் அமைப்பைத் தவிர்த்து, மழையின்றி மாநாடு நடைபெறும் என தலைவருக்கு உறுதியளித்தோம்.

ஆனால், செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வந்தபோது, தலைவர் வைகோ அவர்கள் உடனடியாக முழு பந்தல் அமைக்குமாறு பந்தல் சிவா அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், குறைந்தபட்சம் ஆறு நாட்கள் தேவை என்பதால், அது சாத்தியமில்லை என பந்தல் சிவா தெரிவித்தார். முன்னறிவிப்பின்படி, 13-ஆம் தேதி இரவு மழை பெய்து, மாநாட்டு திடலில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டோம். 14, 15 ஆகிய தேதிகளில் மழை இல்லை என்றாலும், 15-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக முன்னறிவிப்பு வந்ததால், மாநாட்டு நிகழ்ச்சி நிரலை மறுவடிவமைத்து, தலைவர் 8 மணிக்குள் பேசி முடிக்குமாறு திட்டமிட்டோம். மாநாடு குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டிருந்தாலும், நிகழ்ச்சி 45 நிமிடங்கள் தாமதமாகத் சென்றுகொண்டிருந்தது.

இதற்கிடையில், மதிய உணவு முடித்து, ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை நோக்கி புறப்பட்ட வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் வருகை தாமதமானது.

சென்னை-திருச்சி மார்க்கத்தில் பெரிய நெரிசல் இல்லை என்றாலும், திருச்சி-சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் சிக்கி, நகர முடியாமல் தவித்தன. நிகழ்ச்சி தொகுப்பாளர் சகோதரர் மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, காவல் துறை மற்றும் கழகத் தொண்டர் அணியின் ஒத்துழைப்புடன், அண்ண்ன் ஜீவன் மற்றும் சகோதரர் பாஸ்கர் சேதுபதி ஆகியோரிடம் உதவி கோரினார். மாவட்ட ஆட்சியரை அலைபேசியில் தொடர்பு கொண்டு, போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய உதவி கேட்டேன். அவரும் உடனடியாக காவல் துறை அதிகாரிகளை கேட்டுகொண்டார். அனைவரும் இணைந்து ஒழுங்குபடுத்தி, வாகனங்கள் மாநாட்டு திடலை அடைய உதவினார்.

அதன்பின், ஊர்ந்து வந்த வாகனங்கள் மாநாட்டு திடலை அடைந்து, இருக்கைகள் நிறைவடைந்து, நான் பேசத் தொடங்குவதற்கு நேரம் சரியாக இருந்தது.

மழை அச்சுறுத்தலும், போக்குவரத்து நெரிசலும் என் மனதை ஆக்கிரமித்திருந்தன. இதனால், என் உரையின் தொடக்கத்தில் ஏற்பட்ட பதற்றத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால், இயற்கையின் பேரருளையும், இறைவனின் ஆசியையும் நினைத்து, நன்றி உணர்வுடன் பேசத் தொடங்கியபோது,

இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை உயர்த்திப் பிடிக்கும் மறுமலர்ச்சி திமுக தொண்டர்களான உங்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் உயர்ந்த கோபுரமாக என் மனதில் தெரிந்தது. பிறகு, சகஜ நிலைக்குத் திரும்பி என்னுரையை நிறைவுசெய்தேன். உங்களின் எழுச்சியும் கைத்தட்டி ஆர்ப்பரித்த பாங்கும் என்னை வெகுவாக கவர்ந்தது.

தலைவரின் எழுச்சிமிகு பேருரை மாநாட்டை பன்மடங்கு உயர்த்தியது. அனைவரும் பத்திரமாக இல்லம் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, எந்தவொரு சிறுகுறையும், மனவலியும் இல்லாமல், முழு மனநிறைவுடன், புதிய நம்பிக்கையுடன், புத்துணர்ச்சியுடன் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.

இந்த மாபெரும் வரலாற்று வெற்றிக்கு வித்திட்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி பாராட்டும் ஆவலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். என் மனதின் நன்றி உணர்வுடன், உங்கள் அனைவருக்கும், இயற்கைக்கும், இறைவனுக்கும் என் தலைவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.

மாநாட்டு இடத்தைச் சுற்றி, சுமார் 50 கிலோமீட்டர் தொலைவுக்கு, கழகக் கொடிகள் பட்டொளி வீசி, வீரத்தை ஊட்டிய காட்சி, கண்கொள்ளா பேரழகாக மனதில் பதிந்துவிட்டதாக பலரும் என்னிடம் தெரிவித்தனர். அதே மனநிலையில் நானும் உள்ளேன்.

நேற்றைய திங்கட்கிழமை, வேலை நாளிலும், சம்பள இழப்பைப் பொருட்படுத்தாமல், சாரை சாரையாக வந்து கலந்து கொண்ட தொண்டர்களான நீங்கள், கடந்த ஒரு மாதமாக சிறுகச் சிறுக சேமித்து மாநாட்டிற்கு தயாரானது, உங்கள் கைகளாலேயே சுவரொட்டிகள் ஒட்டியதும், சுவர் விளம்பரம் எழுதியதும், நண்பர்களை அழைத்து திரளாகக் கலந்து கொண்டதும், மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன.

தலைவரின் திருமுகத்தை நேரில் காண்பதையும், அவரது பேச்சை கேட்பதையும் ஆகச் சிறந்த பாக்கியமாகக் கருதும் எண்ணற்ற தொண்டர்களான உங்கள் மனதை நான் அறிவேன்; என் மனதை நீங்கள் அறிவீர்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, யார் உழைக்கிறார்கள், யார் தியாகம் செய்கிறார்கள் என்பதை அறிந்து வந்துள்ளேன். எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உழைக்கும், தியாகம் செய்யும் தோழர்களே நமது கட்சியின் ஆகப் பெரும் வளம். நீங்களே நமது இயக்கத்தின் இயக்கச் சக்கரத்தின் அச்சாணி. இவ்வேளையில், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைப் பாராட்டுகிறேன்.

அப்படியான தொண்டர்களில், போலியோவால் பாதிக்கப்பட்டு, இரு கால்களும் செயலிழந்த ஒரு தொண்டர், தவழ்ந்து வந்து மாநாட்டில் கலந்து கொண்டதைக் கண்டு, மேடையிலிருந்து இறங்கி, அவருடன் தரையில் அமர்ந்து படம் எடுத்தது, என் வாழ்நாளின் மறக்க முடியாத தருணமாகும். சேலம் ரஞ்சித்குமார் என்ற மற்றொரு தோழர், தன் மேனியில் கழகக் கொடியையும், முதுகில் என் முகத்தையும் வரைந்து, ஜோதியேந்தி சேலத்திலிருந்து வந்திருந்தார். அவரின் ஜோதியை மேடையில் உயர்த்தியபோது, பெருமித உணர்வு மேலோங்கியது.

இவர்களைப்போல பல எளிய தொண்டர்கள், அவர்களின் சக்திக்கும் மீறி ஏதோ ஒரு வழியில் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்று பெருமைப்படுகிறேன்.

என் உரையில், “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகளை ஓங்கி முழங்கியபோதும், தலைவரின் மாமனிதர் ஆவணப்படப் பாடல் ஒளிபரப்பப்பட்ட போதும் மற்றும் “யார் இவர்? அவர்தான் ஈரெழுத்து மந்திரம் வைகோ” என்ற காணொளி நிறைவிலும், மாநாட்டில் பேரலை எழுந்தது. இந்த ஆர்ப்பரிப்பைக் கண்டு, தலைவரும் நானும் அனைவரும் பிரமித்துப் போனோம்.

இந்தக் காணொளியைத் தயாரித்த இணையதள அணி தம்பிகள் வில்லிச்சேரி ராம்பாபு, ஆர்.வி.சதீஷ்குமார், சகோதரர் மினர்வா ராஜேஷ் உள்ளிட்டோருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் சமூகத்திற்கு தலைவர் ஆற்றிய சேவைகள், சாதனைகள் மற்றும் தியாகங்களை உள்ளடக்கிய, பின்னணி இசையோடு கூடிய காணொளி பெருவாரியான மகளிரை ஈர்த்ததை கண்கூடாகக் கண்டேன்.

நமது கழகக் கொடியை ஒரு கை ஓங்கி உயர்த்திப் பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டு, கழக வண்ணத்தில் “மாநாடு” எனக் கைப்பட எழுதப்பட்ட பதாகை, பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இதை என் பதிவுகளில் தொடர்ந்து இடம்பெறச் செய்தேன். மாநாட்டு செய்திகளைப் பரவலாக்குவதற்கு இந்த வடிவமைப்பு பயன்பட்டது. இதைத் தயாரித்த மாணவர் அணி தம்பி ரிலுவான்கான் அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

மாநாடு பற்றிய வரலாற்று பதிவுகள், தலைவரின் காணொளிகள், செய்திகள், படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, மாநாட்டு செய்திகளை இடைவிடாமல் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து உத்வேகத்தை உருவாக்கிய தோழர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

மேலும், சிறப்பான டிஜிட்டல் வடிவமைப்புகளை செய்துகொடுத்த வான்சுகன் மற்றும் விக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கிடைக்கும் அனைத்து களங்களையும் நமக்கான வாய்ப்பாக மாற்றும் வல்லமை நமது தோழர்களுக்கு இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

இந்த மாநாடு பெருவெற்றி பெற, அயராது உழைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தோழர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் என் கரம் குலுக்கி நன்றி பாராட்டுகிறேன். மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் மாநாட்டை நடத்திக் காட்டிய உங்களைப் பெருமையுடன் போற்றுகிறேன்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மாநாட்டு குழுவினர், மாவட்டச் செயலாளர்கள் முதல் எளிய தொண்டர்கள் வரை உங்கள் பணிகளைப் பாராட்டி மகிழ்கிறேன். எனக்கு உதவிகரமாக பணியாற்றிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிறைவு என்பது முடிவைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல; நிறைவான நிலையிலிருந்து புதிய தொடக்கங்களை உருவாக்கும் அழகான வார்த்தை. திருச்சி மாநாடு நிறைவுடன் நிறைவு பெற்றது. “அணி திரள்வோம், ஆர்ப்பரிப்போம், அங்கீகாரம் பெறுவோம்” என்ற முழக்கத்தை நெஞ்சில் பதித்து, அடுத்தகட்ட ஓய்வற்ற உழைப்பைத் தர தயாராகிவிட்ட உங்கள் அனைவருக்கும் உங்களில் ஒருவனாகக் நன்றி கூறுகிறேன்.

மாநாட்டின் தொடக்கம் முதல் நிறைவு வரை, பெரிதாகவும் சிறிதாகவும் மனநிறைவுடன் உழைத்த, பங்களித்த, கலந்து கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும், இறைவனுக்கும், இயற்கைக்கும் மீண்டும் மீண்டும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்; நன்றி.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
16.09.2025

DuraiVaiko #Vaiko #MDMK #trichymp

Related Posts

POST MY ADD