NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தின் விவசாய நிலங்களுக்கு இடையே ஒரு பெரிய வடிகால் வாய்க்கால் செல்கிறது, கொடிங்கால் வாய்க்கால் என்று அழைக்கப்படும் பழையூர் வடிகால் வாய்க்கால்.

கிராம வரைபடத்தின் படி அந்த வாய்க்காலின் அகலம் 70 அடி முதல் 220 அடி வரை. ஆனால் உண்மையில் அங்கு இருப்பதோ 15-20அடி மட்டும்தான். திருப்பராய்த்துறையில் மட்டும் நிறைய இடங்களில் அந்த வாய்க்காலுக்கு கரைகள் கிடையாது. முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆற்று பாதுகாப்பு முக்கொம்பு பிரிவு இது எதையும் கண்டு கொள்ளவில்லை, மழை பெய்யும் போதும் ஆற்றில் நீர் அதிகமாக வரும் போதும் உபரி நீர் விவசாய நிலங்களுக்குள் புகுவது வழக்கமாக உள்ளது. தற்பொழுது பெய்த மழையில் இங்கு உள்ள பல விவசாய நிலங்களில் நீர் புகுந்ததால் சாகுபடிக்கு என போட்டிருந்த நாற்றங்கால்கள் அனைத்தும் பாழாகி போய்விட்டன. விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்த வாய்க்காலில் எலமனூரில் உள்ள கீழ்போக்கு குழாய் உடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, மக்கள் மனுக்கள் கொடுத்து களைத்து போய்விட்டனர். அது இன்றுவரை சரி செய்யப்படவில்லை. அதேபோல் இந்த வாய்க்காலின் குறுக்கே உள்ள அணையில் 4 மதகுகள் உள்ளன, அவற்றில் 1-2 சரிவர வேலை செய்வதில்லை. இதையும் சரி செய்யாமல் முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு எதைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படாமல் தனது முதன்மை கடமையை விட்டு விட்டு சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவது போல் தெரிகிறது.

ஆற்றுப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக குழுமி, தடுப்பணை, மதகுகள் போன்ற பாசன கட்டமைப்புகளையும் சீரமைக்க வேண்டும், இடங்களை ஆய்வு செய்து வரைபடத்தின் படி வாய்க்காலின் அகலத்தைக் கொண்டு வந்து போதுமான அளவு கரைகள் அமைத்தாலே விவசாய நிலங்களுக்குள் நீர் புகாது என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

செவி சாய்க்குமா ஆற்று பாதுகாப்பு பிரிவு அல்லது சுற்றுலாத்தலத்தின் டிக்கெட் விற்பனையை அதிகமாக்குவதற்கான முயற்சியில் மட்டுமே ஈடுபடுமா ?

நான் இன்ஜினியரா நீ இன்ஜினியரா என அப்பாவி விவசாயிகளிடம் திமிர் காட்டிய மேதகு இன்ஜினியர் சார் இதற்கு பதில் சொல்வாரா?

Related Posts

POST MY ADD