
துரை வைகோ எம்பி அறிக்கை
நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது. மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 1% செஸ் வரியால் விவசாயிகள் கடும் கவலையடைந்தனர். இதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். மாண்புமிகு துணை முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வேளாண் துறை அமைச்சர் அண்ணன் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள், நிதி அமைச்சர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோரையும் சந்தித்து இக்கோரிக்கையை எடுத்துரைத்தேன்.
இதனை ஏற்று, தமிழ்நாடு அரசு மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட 1% செஸ் வரியை (சந்தை வரி) ரத்து செய்து அறிவித்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள சாகுபடி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
இப்போது அதே விவசாயிகளுக்கு மேலும் ஒரு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சந்தையில் மக்காச்சோள விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அவர்களது உழைப்பு பயனின்றி போகிறது.
மக்காச்சோள உற்பத்தி செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,000–2,200 என இருக்கும் நிலையில், தற்போது சந்தை விலை ரூ.1,700–1,800க்கு (சில இடங்களில் அதற்கும் கீழே) வீழ்ந்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்ய, தமிழ்நாடு அரசு ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.250 மானியம் வழங்கினால், விவசாயிகளின் நஷ்டத்தில் அரசு பங்கேற்பதாக அமையும். இது அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, மக்காச்சோள விவசாயத்தையும் தக்க வைக்கும்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில், Market Intervention Scheme (MIS) மூலம் குவிண்டாலுக்கு ரூ.2,150 வரை விலை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சந்தை விலை ரூ.1,900-க்கு கீழே சென்றால், அதிகபட்சம் 50 குவிண்டால் வரை ரூ.250 இழப்பீடு வழங்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதனால் கர்நாடக மக்காச்சோள விவசாயிகள் அம்மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதுபோலவே, ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்ற மாநில அரசுகளும் பல்வேறு வழிகளில் மக்காச்சோள விவசாயத்தை ஊக்குவித்து விவசாயிகளைப் பாதுகாத்து வருகின்றன.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தங்கள் கருணை உள்ளத்துடன் இவ்விஷயத்தைப் பரிசீலித்து, மக்காச்சோளத்திற்கு உரிய மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு துரை வைகோ எம்.பி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



