
பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ அவர்களும் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்கள். திருச்சியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பெரும் அளவில் திரளாக கலந்து கொண்டனர்.

வழக்கமாக அரசியல் கட்சிகளின் மாநாடு என்பது அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கின்ற நேரத்தில் துவங்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகத்தான் தொடங்கும். அதைப்போல மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் எந்தவிதமான சுய கட்டுப்பாடுகளும் இன்றி தங்கள் விருப்பம் போல போக்குவரத்தை தடை செய்வதும் வாகனங்களின் மேலே ஏறி கோஷங்களை முழங்கிக் கொண்டு வருவதுமாக பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகப்பெரிய இடையூறுகளை தருவது வழக்கம். அரை நாளில் நடக்கும் மாநாடு என்கின்ற காரணத்தினால் பெரும்பாலும் பொதுமக்கள் இந்த இடையூறுகளை சகித்தே வந்துள்ளனர். இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த மாநாடு பொதுமக்களிடம் மட்டுமல்ல மற்ற அரசியல் கட்சியினரிடமும் ஒரு புதுவிதமான தாக்கத்தையும் மதிமுகவின் மீது மதிப்பையும் மரியாதையும் உருவாக்கியது என்றே கூற வேண்டும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு ராணுவ கட்டுக்கோப்போடு தலைவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து மிக மிக ஒழுக்கத்தோடும் நேர்த்தியோடும் செயல்படும் தொண்டர்களை கொண்ட இயக்கம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பலமுறை கூறியதை இந்த மாநாடு உண்மை என நிரூபித்து இருக்கின்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் தங்கள் குடும்பத்தோடு ஒன்றாக இந்த மாநாட்டில் கூடினர். நாங்கள் அறிந்த வரை இந்த மாநாட்டிற்கு ஒவ்வொரு நிர்வாகியும் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தொண்டர்களை அழைத்து வந்திருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆனது. அதற்கான சரியான எடுத்துக்காட்டாக திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினர் திருவானைக்காவல் சேர்ந்த மதிமுக நிர்வாகி அப்பீஸ் முத்துக்குமார் தன்னுடைய சொந்த செலவில் ஆறுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சித் தொண்டர்களை குடும்பத்தோடு அழைத்து வந்திருந்தார். அவரைப் போலவே ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்கள் கட்சி உறுப்பினர்களை குடும்பத்தோடு அழைத்து வந்திருந்தார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கையில் குழந்தைகளோடும் சிறுவர்களோடும் வந்திருந்த அந்த தொண்டர்களே அதற்கு சாட்சி. வந்திருந்த கூட்டம் 200 ரூபாய் காகவோ அல்லது மற்ற இலவசங்களுக்காகவோ வந்தது போன்று தெரியவில்லை. அப்படி ஒரு நேர்த்தி.

அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தபடியே சரியாக மூன்று மணிக்கெல்லாம் மாநாடு தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையா அவர்கள் கட்சி கொடியினை ஏற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த ஜோதி ஏற்றப்பட்டு மாநாடு இனிதே தொடங்கியது.

கட்சியின் நிறுவனர் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சரியாக மூன்று மணிக்கு எல்லாம் மாநாட்டு திடலில் நுழைந்ததோடு மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த கட்சியின் மறைந்த மூத்த நிர்வாகிகளின் படங்களை பார்வையிட்டு அவர்களின் கட்சிப் பணிகளை நினைவு கூர்ந்தார்.

சரியாக 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் சரியாக திட்டமிடலோடு பேசி அமர்ந்தனர். மாநாட்டில் துரை வைகோ அவர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஒரு வருடத்தில் ஆற்றிய மக்கள் பணியினை காணொளி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது.

அதில் கடந்த ஓராண்டில் மட்டும் திரு துரை வைகோ அவர்கள் தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து திரு துரை வைகோ அவர்கள் பிரத்தியேகமாக தயாரித்திருந்த வைகோ அவர்களைப் பற்றிய காணொளி காட்சியும் திரையிடப்பட்டது. அந்த காணொளி காட்சியை கண்ட பல தொண்டர்கள் உணர்ச்சி பெருக்கோடு கண்ணீர் விட்டு அழுததை நம்மால் நேரடியாக காண முடிந்தது.

இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசி முடித்தவுடன் தொண்டர்களும் நாமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துரை வைகோ அவர்களின் எழுச்சி உரை தொடங்கியது. சரியாக 25 நிமிடங்கள் துரை வைகோ பேசினார் என்பதை விட உணர்ச்சிகளின் ஒட்டுமொத்த உருவமாக தொண்டர்களின் பிரதிபலிப்பாக அவர்களின் மறு உருவமாக துரை வைகோ அவர்களின் கணீர் பேச்சு அரங்கத்தை மிகப்பெரிய உற்சாக குரலை எழுப்ப வைத்தது.

ஒரே நேரத்தில் தொண்டர்கள் அனைவரும் இளம் தலைவர் துரை வைகோ இளம் தலைவர் துரை வைகோ என உற்சாகப் குரல் எருப்பியது மாநாட்டு அரங்கத்தையே அதிரச செய்தது. தன்னுடைய பேச்சினில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளில் ஒன்றான தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?

என்று துரை வைகோ சிங்கமாக கர்ஜித்த பொழுது அரங்கமே உணர்ச்சி வேகத்தில் ஓங்கார கோஷமிட்டது. அவரை வாழ்த்தி வரவேற்றது. நான் வீழ்வேன் என நினைத்தாயோ என அவர் கர்ஜித்தது முதுகில் குத்திச் சென்ற வஞ்சகர்களுக்கு மட்டுமல்ல துரோகிகளுக்கு மட்டுமல்ல அவரை எதிரியாக பார்க்கும் மற்ற நபர்களுக்கும் ஒரு எச்சரிக்கை கர்ஜனையாகவே அது அமைந்தது. அப்படி அவர் உணர்ச்சி மிக குரலில் கர்ஜனை செய்த பொழுது அந்த அரங்கத்தை காண வேண்டுமே நம் ஒவ்வொரு மயிர் கால்களும் சிலிர்த்து நின்றது என்றால் மிகை ஆகாது அது மட்டுமல்ல சாதாரண ஒரு அரசியல் தலைவரை போல அல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் புள்ளிவிவரத்தோடு தெளிவாக ஆதாரங்களோடு துரை வைகோ அவர்கள் பட்டியலிட்ட பொழுது நாம் மட்டுமல்ல தொண்டர்கள் மட்டுமல்ல திரு வைகோ அவர்களும் துரை வைகோ அவர்களின் அந்த வீர உரையை கண்டு சிலிர்த்துதான் நின்றார்கள்.

இறுதியாக பேச வந்தார் சிம்மக் குரலும் பார்லிமென்ட் டைகர் என பெயர் பெற்ற வைகோ அவர்கள். சிறுவயதில் நாம் வைகோ அவர்களின் பேச்சைக் கேட்ட பொழுது எப்படிப்பட்ட ஒரு உற்சாகமும் வேகமும் ரத்தத்தில் பாய்ந்ததோ அது அந்த மனிதரிடம் இன்றும் நீங்காமல் இருப்பது அதிசயத்தின் உச்சம். இந்த வயதிலும் மனிதர் என்னமாக பேசுகிறார், இந்த மனிதரை தமிழ்நாடு அரசியல் களம் ஏன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை தமிழ்நாட்டு மக்கள் இந்த தலைவரை ஏன் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நம்முள் ஒரு ஆதங்கம் எழுந்தது.

இவர் தலைவன் அல்ல தலைவனுக்கும் மேல் என்பது அவரின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உச்சத்தை தொட்டது. வைகோ அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உணர்ச்சிவப்பட்ட தொண்டர் ஒருவர் வைகோ அவர்களை பார்த்து உணர்வு வேகத்தோடு கூக்குரலிட்டபோது வைகோ அவர்கள் தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு அமைதியாக உட்கார மாட்டாயா என்று கர்ஜித்த பொழுது மறு வார்த்தை பேசாமல் அந்த இளைஞர் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் இதுதான் தலைவனுக்கான இலக்கணம் என்பதை நொடிப்பொழுது வைகோ அவர்கள் நமக்கு எடுத்து காண்பித்து விட்டார்.

திரு வைகோ அவர்கள் சுமார் 55 நிமிடங்கள் இடைவிடாது சிம்மக் குரலில் கர்ஜனை செய்த பொழுது இன்னும் சிறிது நேரம் அவர் பேச மாட்டாரா என நம்மை ஏங்க வைத்தது அவரின் பேச்சு. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி வைகோ அவர்களின் இந்த கர்ஜனைக்கு முன்பு எந்த அரசியல் தலைவரின் பேச்சுக்களும் எடுபடாது என்பதே உண்மை.










தான் கொண்ட கொள்கையை தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும் அழகாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்தார் ஐயா வைகோ அவர்கள். ஆளுமையின் மறு உருவமாக அன்பின் இலக்கணமாக தலைவனின் உருவமாக திரு வைகோ அவர்கள் பிரம்மாண்டமாக நம் முன் உயர்ந்து நின்றார் என்றால் அது மிகையில்லை.

அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடியே சரியாக 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்றது. மற்ற கட்சிகளின் மாநாடு என்பது இரவு 11 மணி 12 மணி வரை நீடித்திருக்கும் ஆனால் எந்த விதமான தடைகளும் இல்லாமல் குழப்பமும் இல்லாமல் மிகச்சரியான திட்டமிடலோடு மாநாடு மூன்று மணிக்கு தொடங்கி சரியாக எட்டு மணிக்கு நிறைவடைந்தது. இந்த திட்டமிடல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சரியான பாடமாகும். கிட்டத்தட்ட ஒரு மாதமாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதிமுக தொண்டர்களும் கடமைப்பட்டிருப்பார் என்பது மிகை இல்லை காரணம் தொண்டர்களுக்கு சரியான நேரத்தில் அவர்கள் இருந்த இடத்திற்கு தின்பண்டங்களும் சுவை மிகுந்த தேநீரும் வழங்கப்பட்டது. ஒருவர் கூட முண்டியடித்து வந்து அந்த தேநீரையும் இனிப்பையும் வாங்கவில்லை அவர்கள் இருந்த இடத்திற்கே அதை வந்த பொழுது அழகாக அமைதியாக அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். அதேபோலவே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்திருந்த அந்த மாநாட்டு பந்தலில் அருந்துவதற்கு தேவையான நீர் பாட்டில் பாட்டிலாக அவர்களுக்கு வழங்கப்பட்டது மேலும் மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்களுக்காக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் ஆண்டவனின் அனுகிரகத்தினாலும் வைகோ துரை வைகோ அவர்களின் நல் மனத்தின் காரணத்தினாலும் சிறு பாதிப்பு கூட எவருக்கும் ஏற்படவில்லை.

மாநாடு நிறைவடைந்த உடன் தான் வேகமாக கிளம்பி செல்லாமல் தொண்டர்கள் அனைவரும் தங்கள் வாகனங்களில் கிளம்பும் வரை காத்திருந்து அனைவரையும் கவனமாக பத்திரமாக ஊர் போய் சேருங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார் திரு துரை வைகோ அவர்கள். இந்த அக்கறையும் நேசமும் பாசமும் இதுவரை நாம் எந்த அரசியல் கட்சித் தலைவரிடமும் கண்டதில்லை.
மேலும் மாநாட்டில் நாம் கண்ட சில காட்சிகளை இங்கே வர்ணிக்க வேண்டியது நம்முடைய கடமை ஆகும். ஆம் வழக்கமாக அரசியல் கட்சிகளின் மாநாடுகள் என்றாலே அங்கு போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சேர்கள் உடைக்கப்படும் அல்லது சிதறடிக்கப்படும் ஆனால் மாநாட்டு பந்தலில் போடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான சேர்கள் ஒன்று கூட உடைக்கப்படவோ சேதப்ப்படவோ இல்லை அனைத்தும் போட்டபடியே எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது. கூட்டத்தில் குடிமகன்களின் தொல்லை எதுவுமே கிடையாது எவரும் குடித்துவிட்டு வந்து மாநாட்டு பந்தலில் எந்த விதமான கலாட்டாவும் செய்யவில்லை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளவில்லை எவரின் மொபைல் ஃபோன்களும் திருடப்படவில்லை பெண்கள் மிக மிக பாதுகாப்பாக உணர்ந்தார்கள் குழந்தைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் மிகத்துல்லியமாக சரியான திட்டமிடலோடு சீரான அமைப்போடு மிக மிக அற்புதமாக நிகழ்த்தப்பட்டது இந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு.
இந்த மாநாடு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்கின்ற சரியான பாடமாகும்.


