
திருச்சி, ஜூன் 17:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை சுபதம் அவென்யூ பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் கழிவு நீர் வடிதல் பணி ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் கழிவுநீர் வடிகால் அல்லித்துறை பஞ்சாயத்தில் ஆரம்பித்து நாச்சி குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இனியானூர் ஊர் வழியாக செல்வதால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் இந்த வழியாக கழிவுநீர் வடிகால் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர்.

இதனால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் அப்பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல்கள் அதிகமாக தாக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடமும் இந்த தொகுதி ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டிடமும் மற்றும் அமைச்சர் கே என் நேருவிடமும் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த தேர்தலின் போது ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இப்பகுதியில் வாக்கு கேட்டு வந்த போது பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார் குறிப்பாக இப்பகுதியில் முக்கிய கோரிக்கையான கழிவுநீர் வடிகால் அமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இப்பகுதிக்கு வந்து பொதுமக்களின் கோரிக்கையை கேட்டதில்லை. அவரை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இதே நிலை தொடர்ந்தால் இப்பகுதி மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
