
இந்தியாவுக்கான ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதர் திரு. ரோமன் பபுஷ்கின் அவர்களை, இன்று (12.08.2025) மதியம் புது தில்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் சந்தித்து, இந்திய குடிமக்கள், குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த கிஷோர் சரவணன் உள்ளிட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தேன். அவர்களை விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரினேன்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:
ரஷ்யாவில் உள்ள பல இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான முக்கியமான விவகாரம் குறித்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் திரு. கிஷோர் சரவணன் (இந்திய கடவுச்சீட்டு எண்: U7949442) ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அவரது பெற்றோருடனான கடைசித் தொடர்பில், அவருக்கு மரியுபோலில் போர் பயிற்சி அளிக்கபட்டு, பின்னர் போர்முனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது கடந்த சில வாரங்களில் வெளியான பல அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களில் ஒன்று.
மேலும், இந்தியா முழுவதிலுமிருந்து மற்ற 14 இந்திய குடிமக்களைக் காணவில்லை என்று கூறி, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு குழுவாக என்னை சந்தித்தனர். (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது). இது ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போரில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகுந்த கவலையைத் தருகிறது.
கிடைத்த தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 31,444 இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் பயின்று வருகின்றனர். இவர்களில் சுமார் 2,000 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், ரஷ்யாவில் படிக்க விரும்பும் மாணவர்களும் அவர்களது குடும்பங்களும் கடும் பயத்தையும் உளவியல் தாக்கத்தையும் சந்திக்க நேரிடும்.
மரியாதைக்குரிய தூதர் அவர்களே,
இந்தியாவும் ரஷ்யாவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையில் வேரூன்றிய நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
பண்டித ஜவாஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி முதல் தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வரை, நமது இருதரப்பு உறவு உறுதியாகத் தொடர்ந்து வருகிறது. நமது மக்களிடையே நட்பு, ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார புரிதல் வலுவாக உள்ளன. இந்த நட்பின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை எழுப்புகிறேன்.
இவ்வளவு நீண்டகால நட்புறவில், கல்வி அல்லது சட்டப்பூர்வ வேலைவாய்ப்புக்காக மட்டுமே ரஷ்யாவுக்கு வந்த இந்திய குடிமக்கள், குடியுரிமை மாற்ற ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்கள் மிகுந்த வேதனையைத் தருகின்றன.
மேலும், சில முகவர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இந்தியர்களை ரஷ்யாவுக்கு அழைத்து வந்து, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இராணுவத்தில் சேர்ப்பதாகவும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.
பிற உலக நாடுகளுடனான வர்த்தக உறவுகளில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்தியா, ரஷ்யாவுடனான நட்பைப் பேணி வலுப்படுத்தி வருகிறது. இந்த நட்புக்கு ஈடாக, ரஷ்யா தனது எல்லைக்குள் உள்ள இந்திய குடிமக்களின், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மிக முக்கிய பிரச்சனைகளில் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவித்து நாடு திரும்பச் செய்யவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உங்களை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்று என் கடிதத்தை முடித்திருந்தேன்.
இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் திரு டெனிஸ் அலிபோவ் அவர்கள் வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளதால், இக்கோரிக்கைக்காக அவருக்கு எழுதிய கடிதத்தையும் துணைத் தூதரிடமே வழங்கினேன்.
எனது இந்தக் கடிதத்தைப் பெற்று வாசித்து பின் எனது விளக்கங்களை கேட்ட பிறகு, துணை தூதர் அவர்கள் விளக்கம் அளித்தார்.
அதில், என்றைக்கும் ரஷ்ய அரசு இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லை என்றும், இருநாட்டின் நல்லுறவை ரஷ்யா பேணுவதாகவும் கூறிய அவர், சட்டத்திற்கு புறம்பான செயல்களின் இருநாட்டிலும் உள்ள இடைத் தரகர்களே ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கிஷோர் சரவணன் மீட்க வேண்டிய எனது கோரிக்கையுடன் இந்திய வெளியுறவுத் துறையின் கோரிக்கை தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளதாகவும், கிஷோர் சரவணனின் தகவல்களை திரட்டியுள்ளோம் என்றும், அவர் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
12.08.2025
புதுடெல்லி