New Trichy Times

Current Date and Time
Loading...

மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், இன்று (12.08.2025) காலை 11 மணியளவில் சந்தித்து உரையாடினேன்.

ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட இளம் இந்திய குடிமகனான திரு. கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற அவரது தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். அதுகுறித்த முழு விவரங்களையும் வழங்கினேன்.

இதற்காக இதுவரை நான் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தேன்.

அதில், இந்திய வெளியுறவுச் செயலாளரை இருமுறையும், வெளியுறவு அமைச்சரை இருமுறையும் நேரில் சந்தித்து இக்கோரிக்கையை எடுத்துரைத்ததை பகிர்ந்துகொண்டேன்.

அதன் பிறகு, தாங்கள் அவையில் இருந்தபோது, ஆப்ரேஷன் சிந்தூர் விவாதத்தில் நான் இந்த விவகாரத்தை சபையில் பேசியதையும் நினைவுபடுத்தினேன்.

அத்துடன், 15 கட்சிகளைச் சேர்ந்த 68 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று பிரதமரை நேரில் சந்தித்தது குறித்து ஏற்கனவே ராகுல் காந்தி அவர்களுக்கு தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டி, அந்தக் கடிதத்தில் சகோதரி பிரியங்கா காந்தி அவர்களும் கையெழுத்து இட்டிருந்ததை அவருக்கு நினைவூட்டினேன்.

இன்று (12.08.2025), இந்த கோரிக்கைக்காக, இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதரை, தூதரகத்தில் சந்தித்து கடிதம் கொடுக்கவுள்ளதையும், அத்துடன், வெளிநாடு சென்றுள்ள ரஷ்ய தூதர் அவருக்கான கடிதத்தையும் துணை தூதரிடம் வழங்கி விளக்கம் அளிக்க உள்ளதையும் பதிவுசெய்தேன்.

கிஷோர் சரவணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும், அவரது பெற்றோர்களின் குடும்பச் சூழலைப் பற்றியும், மாணவரின் மருத்துவக் கனவுகளையும் மீண்டும் விரிவாக ராகுல் காந்தி அவர்களிடம் எடுத்துரைத்தேன். மேலும், அவரது ஆவணங்களின் விவரங்களையும் வழங்கினேன்.

அந்த மாணவர் பொய் வழக்கில் சிக்கிய முழு விவரங்களுடன், அவரது தற்போதைய நிலைமையை ஒன்று விடாமல் விளக்கியதோடு, இதுவரை அவர் அங்கு அனுபவித்து வரும் அனைத்து துயரங்களையும் பட்டியலிட்டேன்.

இத்தகைய தகவல்கள் கிடைத்தபோது, கிஷோர் சரவணன் என்ற ஒரு நபருக்காகவே எனது முயற்சிகளைத் தொடங்கினேன். அப்போதுதான், இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரஷ்யாவில் சிக்கியுள்ளனர் என்பதையும், அவர்களைப் போர்முனையிலிருந்து மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையும் உணர்ந்து, எனது முயற்சிகளை விரிவுபடுத்தினேன்.

அத்தகைய முயற்சிகளை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வழியாக அறிந்துகொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சார்ந்தவர்கள், எனது அலுவலகத்தில் கடந்த 09.08.2025 அன்று என்னைச் சந்தித்தனர். அப்போது நேரில் வந்திருந்தவர்களில் சர்ப்ஜித்சிங் என்பவர், ரஷ்யாவில் வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்டு ஐந்து மாதங்கள் தன் உயிரைப்பிடித்துக்கொண்டு போரில் ஈடுபட்டுள்ளார். உயிர் சாட்சியாக அவரே வந்து வாக்குமூலம் போல பிரச்சனைகளை என்னிடம் எடுத்துரைத்தார்.

அப்போதுதான், இது ஒருவரோ நூற்றுக்கணக்கானவர்களோ அல்ல, குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யாவில் இவ்வாறு ஏமாற்றப்பட்டு போர்முனையில் சிக்கித் தவிப்பதை உணர்ந்தேன் என்பதைத் தெரிவித்து,

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், அறச்செயலின் தேசியக் குரலாகவும் உள்ள தங்களின் திறன்மிக்க தலையீட்டால், இந்த விவகாரத்தை உயர்மட்ட அளவிலும், நாடாளுமன்றத்திலும் எழுப்புமாறு வேண்டினேன்.

அத்துடன், உங்கள் குரல் இந்தியா தனது குடிமக்களை வேறொரு நாட்டின் போருக்கு கட்டாயப்படுத்தப்படுவதை ஏற்காது என்ற வலுவான செய்தியை உலகுக்கும் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையுடன் தெரிவிக்கும் என்று கூறினேன்.

தமிழ்நாட்டை சார்ந்த மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன் உடனடியாக மீட்கப்பட்டு தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும்; மேலும், அனைத்து இந்தியரும் இத்தகைய அநீதியைச் சந்திக்காதவாறு மீட்கப் படவேண்டும்.

இத்தகைய மனிதாபிமானமற்ற நடைமுறைகளிலிருந்து நமது குடிமக்களை காக்கவும், அவர்களை வெளிநாடுகளில் பாதுகாக்கும் வகையிலும் நமது வெளியுறவுக்கொள்கையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதையும், இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி,

இந்த விவகாரத்தை, அதன் தீவிரத்தன்மையையும், துரிதமன நடவடிக்கையின் தேவையையும் மனதில் ஏந்தி, கனிவோடும் உறுதியோடும் கையாள்வீர்கள் என்று நம்புவதாகக் கூறி, அவரது கைகளைப் பற்றி விடைபெற்றேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.08.2025
புதுடெல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD