புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் மூன்றாவது DISHA கூட்டத்தில் பங்கேற்றேன்.
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA), மாவட்ட ஆட்சியர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் தலைமையில், இன்று (29.11.2025) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரான நான், என் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இணைத் தலைவராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு,
ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை இம்மாவட்டத்தில் நடைமுறைபடுத்துவதில் உள்ள வாய்ப்புகள் அல்லது தடைகள் பற்றிய பல்வேறு விவரங்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதிலுள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, அந்த திட்டங்களை நல்ல முறையில் கடைகோடி மக்களும் பயன் பெறும் வண்ணம் நிறைவேற்ற தகுந்த ஆலோசனைகளை வழங்கினேன். அதே நேரம் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை வாழ்த்தி பாராட்டினேன்.
அதன் விவரம் பின்வருமாறு:
- (NHAI) தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
• கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் NH-226 சாலையில் உள்ள தாழைவாரி பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினேன்.
• திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாகத் தரம் உயர்த்தும் பணி குறித்த முன்னேற்றத்தைக் கேட்டேன். 2026 ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஒவ்வொரு முன்னேற்றத்தையும் Status Report ஆக எனக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டேன். - மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்ட கோரிக்கை:
• கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 36 பஞ்சாயத்துகளையும், தாலுகா தலைமையிடத்தையும் கொண்டிருப்பதாலும், சட்டமன்ற தொகுதியாக இருப்பதாலும், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் போக்குவரத்து அதிகரிப்பு காரணங்களால் மகளிர் மற்றும் சிறார்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்களுக்கு உடனடி நிவாரணம் தேவைப்படுவதாலும், இதற்கு கந்தர்வகோட்டையில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மட்டுமே கடமையாற்ற முடியாது என்பதாலும், தற்சமயம் மகளிர் மற்றும் சிறார்கள் புதுக்கோட்டை நகரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை நாடவேண்டி இருப்பதாலும், கந்தர்வகோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பது அவசியம் என்பதை விரிவாக எடுத்துரைத்தேன். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதனை உடனே நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் ஆட்சியரிடமும் வலியுறுத்தினேன். - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS):
• மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அரசு சொந்த கட்டடம், இதர அரசு கட்டடம், வாடகை கட்டடம் என எந்தெந்த இடங்களில் எவ்வளவு மையங்கள் இயங்குகின்றன என்பது குறித்த முழு Location-wise விவர அறிக்கையை எனக்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். இவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, தேவையான உதவிகளை என் மூலம் செய்து தர இயலும் எனத் தெரிவித்தேன். - இரயில்வே துறை சம்பந்தமாக அதிகாரியிடம் கேட்டுக்கொண்ட விவரங்கள்:
• சில மாதங்களுக்கு முன்பு நான் ஆய்வு மேற்கொண்டபோது புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் கழிவறைகள் பராமரிப்பின்றி அசுத்தமாகவும், போதிய தண்ணீர் வசதியின்றியும், நடைமேடைகளில் குடிநீர் வசதி இல்லாமலும், போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததையும், தேசியக்கொடி கூட பறக்கவிடப்படாமலும் இருந்ததை தென்னக இரயில்வே ஆலோசனைக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன். அவர்களும் ஆய்வு செய்து எனது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். மேலும், புதுக்கோட்டை இரயில் நிலையத்திற்கு தண்ணீர் இணைப்பு இல்லை என்பதை அறிந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று, எனது தொடர் முயற்சியால் சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி மூலம் நிரந்தர குடிநீர் இணைப்பை பெற்றுத்தந்துள்ளேன். அதற்காக இரயில்வே அதிகாரிகள் எனக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.நேற்று, எனது அலுவலக உதவியாளர்களை புதுக்கோட்டை இரயில் நிலையத்திற்கு அனுப்பி பார்வையிட கேட்டுக் கொண்டேன். அதன் அடிப்படையில், இன்றும் கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை; தேசியக்கொடியும் பறக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டேன். அவர்களின் கூற்றுப்படி, இந்த இரயில் நிலையத்தில் ஒன்றிய அரசின் அம்ருத் திட்டப் பணிகள் நடந்தாலும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் நிறுத்திவைக்க முடியாது என்பதை தெரிவித்து, மூன்று கழிவறைகளில் ஒன்றையாவது சுத்தம் செய்து, தண்ணீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுத்து, பராமரிக்க வேண்டும் என்றும், குடிநீர் வசதியை இரண்டாம் நடைமேடைக்கு உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினேன். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.• திருவப்பூர் மேம்பாலம் மற்றும் கருவேப்பிலையான் பகுதி மேம்பாலப் பணிகள் குறித்தும் விரிவாக வினவினேன்.திருவப்பூர் புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியில் உள்ளதால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் முடித்து, ஆவண வேலைகளையும் நிறைவு செய்து அவ்விடத்தை விரைவில் இரயில்வேயிடம் ஒப்படைக்கபடும் என ஆட்சியரும், அதன் பிறகு பணிகள் தொடங்கப்படும் என இரயில்வே அதிகாரிகளும் தெரிவித்தனர். ஒவ்வொரு கட்ட முன்னேற்றத்தையும் Status Report ஆக எனக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டேன். புதுக்கோட்டை மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கையான கருவேப்பிலையான் பகுதியில் மேம்பால கட்டுமான பணிக்கு இரயில்வே துறை ஒப்புதல் தெரிவித்த பின்பும் பணிகள் நடைபெறாமல் உள்ள காரணத்தை கேட்டேன். இந்தப் பகுதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை இணையும் இடத்தில் உள்ளதால் குழப்பம் இருந்ததாகவும், இப்போது, மாநில நெடுஞ்சாலை துறையினர் பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் வழங்கி, இடத்தை ஒப்படைத்து விட்டதால் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று பதில் அளித்தனர். இதன் முன்னேற்ற நிலை குறித்த ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டையும் ஒவ்வொரு வாரமும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். - மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரியிடம் கேட்டுக்கொண்ட விவரங்கள்:
• கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையின் தற்போதைய கட்டடங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட இடத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்டுவது என முடிவாகியுள்ளது குறித்து வினவினேன். வருவாய்த் துறை மற்றும் PWD ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி அருணா இ.ஆ.ப அவர்களின் முன்னிலையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு. முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சின்னதுரை, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு. இராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சிக் கழகத்தின் (DRDA) திட்ட இயக்குனர் திருமதி ஜெயசுதா, கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் எஸ். கே கலியமூர்த்தி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
29.11.2025



