
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயிலின் பராமரிப்பு சம்பந்தமாக,
ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு நான் அனுப்பியிருந்த கேள்விகளும்,
அதற்கு, நேற்று (21.07.2025) அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலும்,
பின்வருமாறு :
கேள்வி எண் 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில், இந்திய தொல்லியல் கண்காணிப்பகம் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆம் எனில், அதன் விவரங்கள் தருக.
பதில் : ஆம். புதுக்கோட்டையில் உள்ள குன்றாண்டார் கோயில் (பாறை வெட்டப்பட்ட சிவன் கோயில், பீடத்தின் முகப்பில் சக்கரம் பொறுத்தப்பட்ட கார் மண்டபம்), இந்திய தொல்லியல் கண்காணிப்பகம் (ASI) கட்டுப்பாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக உள்ளது.
கேள்வி எண் 2: கோயிலில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது அல்லது கவனிக்கப்படாமல் உள்ளது என்பது உண்மையா?
மற்றும்
கேள்வி எண் 3: பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தால், அதற்கான காரணங்கள் என்ன? நிறுத்தப்படவில்லை எனில், ஏன் நீண்ட காலமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் இல்லை என்பதை விளக்கவும்.
பதில் : பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தேவைக்கு ஏற்ப, கிடைக்கும் வளங்களை பொறுத்து தவறாமல் நடத்தப்படுகின்றன.
1958 ஆம் ஆண்டு பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்படுகிறது.
கேள்வி எண் 4 & 5: அரசு இந்த கோயிலில் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதா?
மற்றும்
கேள்வி எண் 5: அப்படி திட்டம் இருந்தால், அதற்கான காலக்கெடு மற்றும் பட்ஜெட் விவரங்களைத் தருக.
பதில் : நினைவுச்சின்னத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வருடாந்திர பாதுகாப்பு திட்டம் (Annual Conservation Plan – ACP) தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு தற்போதைய நிதியாண்டிற்கு ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேள்வி எண் 6: தமிழ்நாட்டில் குன்றாண்டார் கோயில் போன்ற பாரம்பரிய கட்டிடங்களை ASI கட்டுப்பாட்டில் கண்காணித்து பராமரிக்க ஒன்றிய அரசுக்கு திட்டம் உள்ளதா? இருந்தால், அதன் விவரங்கள் தருக.
பதில் : தமிழ்நாட்டில் ASI கட்டுப்பாட்டில் 412 நினைவுச்சின்னங்கள் உள்ளன. ASI அதிகாரிகள் காலாண்டு சோதனைகள் செய்து, கண்காணித்து தேவைப்படும்பட்சத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
22.07.2025
புதுடெல்லி