
இன்று காலை 6:30 மணி அளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்த திரு துரை வைகோ எம்பி அவர்கள் விரைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுபகம் அவென்யூ அல்லித்துறை பஞ்சாயத்தை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் இன்று திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். அதன் விவரம் பின்வருமாறு.
குடியிருப்பு பகுதியான சுபகம் அவென்யூ அருகில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க இருப்பதாகவும் இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்ற காரணத்தினால் அந்த டாஸ்மாக் கடையை திறக்காமல் இருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் உதவி புரிய வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்தனர். மேலும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள சாக்கடை நீர் குடியிருப்பு வாசிகளின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், வார்டு கவுன்சிலர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.

மேலும் மணப்பாறை தாலுகா கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மூன்று வயது விமலன் என்கின்ற ஆண் குழந்தை தலைவலி காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவ செலவுகளுக்காக ரூபாய் ஆறு லட்சம் தேவைப்படுவதாகவும் அதனை பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து திரு துரை வைகோ எம்பி அவர்களிடம் மனு அளித்தார்கள். அந்த மனுவினை உடனடியாக பரிசீலனை செய்த துரை வைகோ அவர்கள் தன்னுடைய உதவியாளர்களிடம் உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்யுமாறு கூறி உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னுடைய பரிந்துரை கடிதத்தையும் அனுப்பி வைத்தார்.

திருச்சி துவாக்குடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்தப் பகுதியில் சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றார்கள். இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு சர்வீஸ் சாலை அமைப்பதற்கான அனைத்து வேலைகளையும் முன்னெடுத்து செய்து வருகின்றார் திரு துரை வைகோ எம்பி அவர்கள்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதற்கான தகவல்களை பெறுவதற்காகவும் அவர்களின் கோரிக்கை மனுவை பெறுவதற்காகவும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்திருந்தார். அவர்களோடு உரையாடிய திரு துரை வைகோ எம்பி அவர்கள் அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் திருப்பராய்த்துறை கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் தொடர்ந்து 16 ஆண்டுகளாக மின்சார வசதி குடிநீர் வசதி இல்லை என்று பொதுமக்கள் திரு துரை வைகோ எம்பி அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகளை பற்றி மாவட்ட ஆட்சியர் அவர்களோடு விவாதித்து நந்தவனம் கிராம மக்களின் பிரச்சனையை துரிதமாக நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்கும் படியும் கோரிக்கை வைத்தார்.
காலை ஆறு முப்பது மணி அளவில் விமான நிலையம் வந்து இறங்கிய திரு துரை வைகோ எம்பி அவர்கள் காலை 10:30 மணி வரை சுமார் 4 மணி நேரம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியரோடு விவாதித்ததோடு மட்டுமன்றி அந்த மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்து அவர்களின் கோரிக்கைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து மக்கள் பணியே மகேசன் பணியென முழுமூச்சாக செயல்பட்டு வரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ அவர்களின் தேனி போன்ற இந்த சுறுசுறுப்பான செயல்வேகத்தையும் மக்களோடு நெருங்கி பழகி சாமானிய மனிதன் போல நடந்து கொள்ளும் நற்குணத்தையும் காணும் பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி மகிழ்கின்றனர்.