
ஒருபுறம் இந்தியாவில் நாம் போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் ரஷ்யாவில் கிஷோர் சரவணன் போர் நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்துடன்,
இன்று (21.08.2025) காலை பிரதமர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும்,
வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று, வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களையும் சந்தித்து, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை குறித்து கீழ்கண்ட கோரிக்கை கடிதத்துடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன்.
இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எங்கள் இல்லத்தில், தலைவர் வைகோ அவர்களை கிஷோர் சரவணனின் பெற்றோர்கள் சந்தித்து, தங்கள் நிலையை எடுத்துரைத்து கண்ணீர் மல்க தலைவர் வைகோ அவர்களிடம் வேண்டியுள்ளனர்.

அப்போதே எனக்கு அழைத்த தலைவர் அவர்களிடம், நான் இதுகுறித்து மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், அதன் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளையும் எடுத்துரைத்து, அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
இதனை சுட்டிக்காட்டி பிரதமர் அவர்களிடம், ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை மீட்க வேண்டி, அவர்களது குடும்பங்கள் இந்தியாவில் கண்ணீரும் கம்பலையுமாக பெரும் பதைபதைப்புடன் காத்திருப்பதை எடுத்துரைத்து, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேண்டினேன்.

அப்போது பிரதமரிடம், கிஷோர் சரவணனுடன் இருந்த ஒருவர், அவரது பெற்றோருக்கு அனுப்பிய அலைபேசி செய்தியை குறிப்பிட்டேன். அதில், கிஷோர் சரவணன், Kostyantynivka என்ற இடத்திற்கு போர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது என கோரிக்கை வைத்திருந்ததையும் சுட்டிக்காட்டினேன்.

ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புதின் அவர்களை நேரில் சந்தித்து இவ்விவகாரம் குறித்து பேசுவதாகவும், கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நம்பிக்கையளித்தார். ஆனால், அதற்குப் பிறகும் கிஷோர் போர் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வந்தது. இந்திய அரசு, பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நானும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகப் போராடிவரும் போதிலும், இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற ஆதங்கத்தையும் பிரதமரிடமும், வெளியுறவுத்துறை செயலாளரிடமும் வெளிப்படுத்தினேன்.

மேலும்,
பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வந்திருக்கும் செய்தியை பார்த்து இந்தியாவிலிருந்து பல்வேறு தரப்பினர் என்னை அலைபேசி வழியாகவும் நேரிலும் சந்தித்து, இதுபோல ரஷ்யாவில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, உறவினர்களை மீட்டுத்தர உதவிடுமாறு கேட்கின்றனர். அதன் அடிப்படையில் பார்த்தால் ஒருவர் அல்ல இருவரல்ல, நூற்றுக்கணக்கானவர்கள் கூட அல்ல; ஆயிரக் கணக்கான இந்தியர்கள் ரஷ்யாவில் போர்முனையில் சிக்கி அவதிப்பட்டு கொண்டிருப்பதை பிரதமரிடம் தெரிவித்தேன்.
அப்படி, ரஷ்யாவில் சிக்கியிருந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த அவர்களின் உறவினர்கள் கடந்த 09.08.2025 அனறு என்னைச் சந்தித்து, அவர்களை மீட்க உதவி கோரினர். அந்த 14 இந்தியர்களில் 15 ஆவது நபரான சர்ப்ஜித்சிங், ஐந்து மாதங்கள் ரஷ்யாவில் போரில் ஈடுபட்டு, உயிர் தப்பி இந்தியா திரும்பியவர். அவர் கூறியதாவது:
ஒரு ரஷ்ய பெண்மணி, இந்தியர்கள் சிலரது உதவியுடன் ரஷ்ய கூரியர் நிறுவனத்தில் 70,000 ரூபாய் சம்பளத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, தன்னையும் 18 இந்தியர்களையும் ஏமாற்றி, ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று, ரஷ்ய மொழியில் உள்ள ஒப்பந்தத்தில் போலியான இந்திய மொழிபெயர்ப்பை வழங்கி கையெழுத்தை பெற்று, போர் பயிற்சி அளித்து, போருக்குள் தள்ளியதாகத் தெரிவித்தார்.
அதேபோல், இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் (திருச்சி பதிப்பு) செய்தியில் வெளியான முக்கியமான தகவலைச் சுட்டிக்காட்டினேன்.
அதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ராஜபாண்டி என்ற 24 வயது இளைஞரை, ரஷ்யாவில் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, கொரியர் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 லட்சம் ரூபாய் பணம் பெற்று கொண்டு, அவரை டெல்லிக்கு வரவழைத்து, இன்னும் விசா தயாராகவில்லை எனக் கூறி பல மாதங்கள் அலைக்கழித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், டெல்லியிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியை காண்பித்தேன்.
ஒருவேளை ராஜபாண்டி ரஷ்யாவிற்கு சென்றிருந்தால், சர்ப்ஜித்சிங் மற்றும் 18 பேரைப் போலவே அவரும் ஏமாற்றப்பட்டு, போர் பயிற்சி தரப்பட்டு, ரஷ்யா உக்ரைன் போரில் தள்ளப்பட்டிருப்பார். அங்கு இறந்துபோவதற்கு பதில் இங்கேயே இறந்துள்ளார்.
இது ஒரு முறைமையான (pattern) மோசடி வலையமைப்பாக (network) இயங்குவதைச் சுட்டிக்காட்டி, இதனை உடனடியாகத் தடுக்காவிட்டால், மேலும் பல ஏழை எளிய இந்திய இளைஞர்கள் இத்தகைய மோசடிகளுக்கு இரையாகி, ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தேன். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினேன்.
குறிப்பாக பிரதமரிடம் உரையாடிய போது, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் உள்ள ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்ற ஒருவர் குற்றம் இழைத்து தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டு மீதமுள்ள தண்டனை காலத்தை இங்கு கழிக்கலாம் என்று அந்த ஒப்பந்தத்தில் உள்ளதை எடுத்துரைத்து, அப்படி உள்ள நிலையிலும், ரஷ்ய அரசு திட்டமிட்டே மறைமுகமாக இப்படிப்பட்ட மோசடி வேலைவாய்ப்பு வலைப்பின்னல் அமைப்புகளோடு இணைந்து இந்தியாவிலிருந்து ஆள் பிடித்து போருக்கு தள்ளுவதாக நான் குற்றம் சாட்டினேன்.
கடந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சர், கிஷோர் சரவணனை அப்போது வைத்துள்ள கேம்ப் இடத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டதாக என்னிடம் கூறினார். ஆனால் இப்போது போருக்குள்ளேயே அவர் தள்ளப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டேன்.
அப்போதே என் முன்பே, பிரதமர் திரு மோடி அவர்கள் தன்னுடைய செயலாளரை அழைத்து, இது குறித்த விவரத்தை ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவரிடம் PM அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டார்.
ரஷ்யாவில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த கிஷோர் சரவணனை மீட்கவும், மகாராஷ்டிரா பூனேவை சேர்ந்த ஓம் சந்திரகாந்த் நேர்க்கர் உட்பட 14 இளைஞர்களை தேடி கண்டுபிடித்து மீட்டு அழைத்து வரவும், அது மட்டுமல்லாமல் ரஷ்ய போர் முனையில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கனக்கான அப்பாவி இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கும், இது போன்ற சிக்கலில் புதுக்கோட்டை ராஜபாண்டி போல இன்னும் ஒருவர் கூட சிக்கி விடாமல் இருப்பதற்கும் வேண்டிய அனைத்து முயற்சிகளையும் முழு நம்பிக்கையுடன் நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
21.08.2025
புதுடெல்லி