திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர், முன்னதாக நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50 கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆனந்தி மேடு கிராமத்தில் உள்ள தெற்கு ஐயன் வாய்க்காலை தூர்வார வேண்டும், மேலும் ஐயன் வாய்க்கால் கரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இதனை மழைக்காலத்திற்கு முன்பாக சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

போராட்டத்திற்கு பின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,… திருச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஏரிகளை, கிளை வாய்க்கால்களை மழைக்கு முன்பு தூர்வார வேண்டும் என கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தோம். இதில் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றப் படவில்லை. லால்குடி வட்டம் ஆனந்திமேடு கிராமத்தில் 300 ஏக்கரில் வாழை, கரும்பு, நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள தெற்கு ஐயன் வாய்க்கால் இதுவரை தூர்வாரப் படவில்லை. இதனை உடனடியாக தூர்வார வேண்டும்.
அதேபோல கடந்த 20 ஆண்டுகளாக ஆனந்திமேடு பகுதியில் உள்ள வாய்க்கால் கரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு இடு பொருட்கள் எடுத்து செல்வது, அறுவடை பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. இதனை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நீண்ட ஆண்டுகளாக வைத்து வருகிறோம். இந்த கோரிக்கைகள் குறித்து இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கூட வந்து பார்வையிடவில்லை. இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரை திருச்சி மாவட்டத்தில் உள்ள 79 கிளை வாய்க்கால்களில் திறந்து விட வேண்டும். இதன் மூலம் சம்பா, குறுவை சாகுபடி செய்ய உதவியாக இருக்கும். திருச்சி மாவட்டத்தில் கடைமடை தண்ணீர் சென்று உள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.