
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், அருகில் உள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அழிப்பதற்காக, உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலையை பிசானத்தூர் கிராமத்திலிருந்து மாற்றி, மக்கள் வசிக்காத, விவசாய நிலங்கள் இல்லாத, நீர்நிலைகளுக்கு அருகில் இல்லாத, நீராதாரங்கள் பாதிக்கப்படாத, மக்கள் பயன்பாடு அற்ற தரிசு நிலங்களைத் தேர்வுசெய்து, அந்த இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள், குறிப்பாகப் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், கடந்த ஒரு மாதகாலமாக அறவழியில், கட்சி பாகுபாடின்றி, காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அறிந்து, அவர்களின் போராட்ட இடத்திற்கு கடந்த 22.11.2025 அன்று நேரில் சென்று, மக்களைச் சந்தித்து எனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டேன்.
அப்போது நான் பேசுகையில், இந்தப் பிரச்சனை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் “இவர்கள் என் மக்கள்; இது என் கிராமம்” என்ற உணர்வோடு உங்களுக்காக என் பணிகளை மேற்கொள்வேன் என்று நம்பிக்கை அளித்திருந்தேன்.
இதற்காக அப்போதே, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இதுகுறித்து மனு அளித்தேன்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த நிலைப்பாடையும் எடுக்க மாட்டோம் என்று நல்லவிதமாக எனக்கு பதில் அளித்தார்கள்.

சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ஆய்வறிக்கை அனுப்பியுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் என்னிடம் தெரிவித்தார்.
அதேபோல, மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் எனது இந்த கோரிக்கையோடு விரிவாக நான் உரையாடியபோது,
ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு முன் Consent to Establish (CTE) அனுமதியையும், கட்டுமானம் முடித்து அந்தத் தொழிற்சாலை தனது செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன் Consent to Operate (CTO) அனுமதியையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெறவேண்டும் என்றும்,
பிசானத்தூர் கிராமத்தில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) அமைக்க முதற்கட்ட Consent to Establish (CTE) அனுமதி மறுக்கப்படும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
அதாவது, பிசானத்தூர் கிராமத்தில் இந்த உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இனி அமைவதற்கான வாய்ப்பே இல்லை.

இது, புதுக்கோட்டை மாவட்ட, பிசானத்தூர் கிராம மக்களுக்கு, அவர்களின் ஒற்றுமைக்கு, அவர்களின் அறவழி போராட்டத்திற்கு, அவர்களின் நம்பிக்கைக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன்.
பசுமை கிராமமாக குடியரசுத் தலைவர் விருது பெற்ற இந்த அழகிய கிராமத்தின் சுற்றுச்சூழல், விவசாயம், நீராதாரங்கள், மக்களின் உடல்நலம் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையை உருவாக்கித்தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும்,
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டாக்டர் எம். ஜெயந்தி IFS அவர்களுக்கும், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை கூடுதல் தலைமைச் செயலர் திருமதி சுப்ரியா சாஹூ IAS அவர்களுக்கும், துறை இயக்குநர் திரு. A. ராகுல்நாத் IAS அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி அருணா IAS அவர்களுக்கும், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை பிசானத்தூர் கிராம மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
30.11.2025


