
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவெறும்பூர், பாரதிபுரத்தைச் சேர்ந்த பாலு ராமு என்பவர் அமெரிக்காவில் பணியாற்றிய இடத்தில் உயிரிழந்துவிட்டார். இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலகத்தில் 16.02.2026 ஆம் தேதி மறைந்த பாலு ராமு அவர்களின் மனைவி மகேஸ்வரி, மூன்று மகள்கள் கோமதி, ரேவதி, சுமதி மற்றும் அவரது தம்பி மோகன் ராம், மருமகன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கோரிக்கை மனு வழங்கி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து துரை வைகோ எம்.பி அலுவலகத்தில் இருந்து, மின்னஞ்சல் மூலமாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர், 17.02.2026 அன்று திருச்சி வந்த துரை வைகோ எம்.பி வெளி விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசினார்.

இதனையடுத்து, பாலு ராமு அவர்களது உடல் இந்தியா வருவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்ட தகவலை வெளிவிவகாரத் துறை அதிகாரிகள் 21.02.2026 அன்று அவருக்கு மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தனர். துரை வைகோ வும் அவர்களது குடும்பத்தினரிடம் இதை உறுதிபடுத்தினார்.

அதன்படி மறைந்த பாலு ராமு அவர்களின் உடல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு 25.02.2026 இன்று அதிகாலை வந்தது. விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி, உடலை ஒப்படைக்கும் நடைமுறைகளை விரைந்து முடிப்பதற்கும் ஏற்பாடு செய்தார் துரை வைகோ எம்.பி.
அவருடைய வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திமுக செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் மறைந்த பாலு ராமு அவர்களது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதன்பின்னர் மறைந்த பாலு ராமு அவர்களது தம்பி மோகன் ராம், மருமகன் மீனாட்சி சுந்தரம் ஆகியோரிடம் உடல் ஒப்படைப்பதற்கும் உதவினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் இயங்கி வரும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வாயிலாக இலவச ஆம்புலன்ஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்தார் துரை வைகோ எம்.பி.

அந்த ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து திருச்சி திருவெறும்பூருக்கு வந்த பாலு ராமு உடலுக்கு மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், இறுதி நிகழ்விலும் பங்கேற்று மறுமலர்ச்சி திமுக சார்பிலும், துரை வைகோ எம்.பி சார்பிலும் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற பதினாறு மாதங்களில், அயலகத்தில் உயிரிழந்த பத்துக்கும் மேற்பட்டோர் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வந்து, உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருக்கின்றார். வேலைக்காக வெளிநாடு செல்லும் பலர் இறந்து போனபின்பு, சரியான வழிகாட்டுதலும், உடலைக் கொண்டு வருவதற்கு போதிய வசதியின்மையாலும் இறந்து போனவர்களின் முகத்தை உறவினர்கள் பார்க்க முடியாமல், அயலகத்திலேயே இறுதி நிகழ்ச்சி நடக்கின்ற சூழல் உள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் பார்ப்பதற்கு, துரை வைகோ எம்.பி மனிதாபிமானத்தோடு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுபோல அயலகங்களில் வேலைக்காகச் சென்று, தவறானவர்களிடம் சிக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களை உயிருடனும் மீட்டு வந்திருக்கிறார் எனும்போது, பொதுவாழ்க்கை அவருக்கு வழங்கி இருக்கின்ற இந்தப் பொறுப்பை உணர்ந்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது புலப்படுகிறது.
துரை வைகோ போன்றவர்களால்தான் மனிதம் மரிக்காமல் மலர்கின்றது.


