NTT TAMIL

Current Date and Time
Loading...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் நெஞ்சை பதறச் செய்கிறது!

கரூரில் தவெக தலைவர் சகோதரர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தார்கள் என்ற செய்தியும், 50 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதும் நெஞ்சை பதறச் செய்கிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இத்துயர சம்பவத்தை எதிர்கால படிப்பினையாக கருதி அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், ஆன்மிக கூட்டங்கள் என திரளான மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற உயிர் இழப்புகளை தவிர்க்க சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டும், காவல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களின் துயர சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பலர் உயிரிழந்தார்கள். ஆன்மீகக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளில் இது போன்ற துயர சம்பவங்கள் நடந்தேறி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஆகவே இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பை தவிர்க்க பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் விழிப்புணர்வு பெற வேண்டும் என கவலையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களை கரூரில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை காக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட உத்தரவிட்டிருக்கின்ற தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் துரித நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது.

இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

வருத்தமுடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
27.09.2025

DuraiVaiko #Vaiko #MDMK #trichymp

Related Posts

POST MY ADD