எனது வேண்டுகோளை ஏற்று இரஷ்யாவில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்!

இராஷ்யாவில் போர்முனையில் சிக்கி தவிக்கும் கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், ஆகஸ்டு 12 ஆம் தேதி
சந்தித்து உரையாடினேன்.
அப்போது கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற உங்களது தலையீடு மிக அவசியம் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். கிஷோர் சரவணன் என்ற தமிழர் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரஷ்யாவில் இவ்வாறு ஏமாற்றப்பட்டு போர்முனையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும், அனைவரும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அக்குடும்பங்களின் கண்ணீரை துடைக்க மக்களவையின் எதிர்கட்சி தலைவராக நீங்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு ஆகஸ்டு 13 ஆம் தேதி அன்று மக்களவை எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு இராகுல்காந்தி அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில்
இரஷ்யாவில் இந்திய மாணவர்களும், தொழிலாளர்களும் போர்முனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி துன்புறுத்தபடுகிறார்கள் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ அவர்கள் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டைச் சார்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் கிஷோர் சரவணன், தன் பெற்றோரிடம் வலுக்கட்டாயமாக இராணுவ பயிற்சி அளிக்கபட்டு போர்முனைக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இந்த சிக்கலில் தவித்து வருகிறார்கள். பலர் காணவில்லை என்றும் அவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்க கூடும் என்றும் நம்பப்படுகிறது. வலுக்கட்டாயமாக போர்முனைக்கு அழைத்து செல்லப்பட்ட அனைத்து இந்தியர்களும் நாடு திரும்ப
அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
என் வேண்டுகோளை ஏற்று ஏழை, எளிய மக்களின் கண்ணீரை துடைக்க ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மாண்புமிகு எதிர்கட்சி தலைவர், அன்பு சகோதரர் திரு. இராகுல்காந்தி அவர்களுக்கு துயரத்தில் துடிக்கும் பெற்றோர்களின் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
18.08.2025
புதுடெல்லி