
இன்று (12.08.2025) மாலை, மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை கடிதம் கொடுத்து வேண்டுகோள் விடுத்தேன்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இவ்வசதியை அமல்படுத்த 2022-இல் ஒன்றிய அரசின் சுங்கத் துறை ஏற்கனவே அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, இது முக்கியமான முதல் படியாக இருந்தபோதிலும், இவ்வசதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தேன்.

திருச்சி, தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது, தொழில்துறை, வணிகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு முக்கிய மையமாக விளங்குகிறது. இவ்விமான நிலையம், வளைகுடா (GCC) மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தைக் சிறப்புடன் கையாள்கிறது. மேலும், அவசர சரக்கு மற்றும் அஞ்சல் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கு ஏற்ற இடத்திலும் உள்ளது. மேலும், இங்கு இவ்வசதியை செயல்படுத்துவதன் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பொருட்களை விரைவாக அனுப்ப முடியும். இதனால், தமிழ்நாட்டில் மத்திய மாவட்டங்களில் உள்ள உள்ளூர் வணிகங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSMEs), மற்றும் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவர்.

மேலும், திருச்சி விமான நிலையத்தில் இந்த வசதி இல்லாததால் பெங்களுரூ, கொச்சின், சென்னை போன்ற பிற விமான நிலையங்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது எனவும் எடுத்துரைத்தேன்.
இந்த வசதியைத் தொடங்க, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சுங்கத் துறைக்கு “செயல்பாட்டிற்கு தயார்” (Ready to operate) எனும் ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும். இதன் பின்னரே திருச்சியில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு சேவைகளைத் தொடங்க முடியும்.
எனவே, AAI இந்த ஒப்புதலை உடனடியாக வழங்க அறிவுறுத்துமாறு அமைச்சரை வேண்டினேன். மேலும், திருச்சி விமான நிலையத்தில் Air Courier Cargo வசதியை தாமதமின்றி செயல்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம், சுங்கத் துறை மற்றும் அஞ்சல் இயக்குநர்களுடன் இணைந்து விமான போக்குவரத்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரைக் கேட்டுக் கொண்டேன்.
இந்த நடவடிக்கை, வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதுடன், திருச்சியை சுற்றி அமைந்துள்ள தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்தேன்.
எனது கோரிக்கையின் தேவையையும் அதன் அவசியத்தையும் உணர்ந்த அமைச்சர் அவர்கள், உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, உறுதியான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.08.2025
புதுடெல்லி