
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த 26.10.2025 அன்று திருச்சி, காஜாமலை, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள முன்னர் நேரு யுவா கேந்திரா என்று அழைக்கப்பட்ட, தற்போது மேரா யுவா பாரத் (Mera Yuva Bharat – MY Bharat) எனப்படும் அலுவலகத்தையும், அதனுடன் இணைந்த இளைஞர் விடுதியையும் (Youth Hostel) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துரை வைகோ எம்பி
.
நேரு யுவா கேந்திரா என்பது ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் (Ministry of Youth Affairs & Sports) கீழ் இயங்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, நாடு முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களை சமூக சேவை, கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் தளமாக விளங்குகிறது.
இதனுடன் இணைந்த இளைஞர் விடுதி, 1996ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்சிக்கு கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக வரும் ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த செலவில் தங்கும் வசதியை வழங்கி வந்தது.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வெளியேற்றம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், இவ்விடுதி பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டு, புதர்கள் மண்டி, புழக்கமின்றி கிடக்கிறது.
இந்த விடுதியை துரை வைகோ நேரில் ஆய்வு செய்தபோது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதனை புனரமைப்பதற்கு தேவையான நிதி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதற்கு பின்னர் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இது குறித்து நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று (02.02.2026) ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் துரை வைகோ கேட்டிருந்த கேள்விகளுக்கு,
மாண்புமிகு ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல். மாண்டவியா அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
துரை வைகோ MP யின் கேள்விகள்:
(அ) தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள இளைஞர் விடுதி சீரழிந்த நிலையில் உள்ளது என்றும், இளைஞர் பயிற்சி மற்றும் தங்குமிட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றும் ஒன்றிய அரசு அறிந்துள்ளதா?
(ஆ) இந்த விடுதியின் புனரமைப்பிற்காக மாவட்ட இளைஞர் விடுதி மேலாண்மைக் குழுவிடமிருந்து ஏதேனும் திட்டம் ஒன்றிய அரசுக்கு கிடைத்துள்ளதா?
(இ) அவ்வாறு இருந்தால், அதன் விவரங்கள் என்ன? குறிப்பாக 05.01.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ரூ.90,62,400/- மதிப்பீட்டுத் தொகை கொண்ட திட்டம் மற்றும் அதன் தற்போதைய நிலை என்ன?
(ஈ) இந்த இளைஞர் விடுதி, மை பாரத் (முன்னாள் நேரு இளைஞர் கேந்திரா) பராமரிப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதா? மேலும் அதன் பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதா?
(உ) இளைஞர்கள் தங்கவும் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் புனரமைப்புப் பணிகளை அனுமதித்து, அதை தொடங்குவதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் காலக்கெடுவை முன்மொழிகிறதா?
என்று கேட்டிருந்த கேள்விகளுக்கு,
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் எல். மாண்டவியா அவர்கள் வழங்கிய பதில்:
இளைஞர் விடுதி விதிகளின்படி, விடுதி கட்டப்பட்ட பின்னர், அந்தந்த இளைஞர் விடுதி, விடுதி மேலாண்மைக் குழு (Hostel Management Committee – HMC) வசம் ஒப்படைக்கப்படுகிறது. இக்குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் தலைவராக உள்ளார். விடுதி புனரமைப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக ஒரு முறை ரூ.20 லட்சம் வரை உதவித்தொகை வழங்குவதற்கும் விடுதி விதிகளில் வாய்ப்பு உள்ளது. திருச்சி இளைஞர் விடுதி குறித்து, HMC தலைவரிடமிருந்து 05.01.2022 தேதியிட்ட ரூ.90,62,400/- தொகைக்கான திட்டம் அமைச்சகத்திற்கு கிடைத்தது. பின்னர் அது HMC-யால் 13.10.2023 அன்று ரூ.19,92,700/- ஆக திருத்தப்பட்டது. இத்திருத்தப்பட்ட திட்டம் அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டு, 26.03.2024 அன்று அங்கீகாரக் கடிதம் (Letter of Authorization) வழங்கப்பட்டது; ஆயினும், சென்னை CPWD-யால் அக்கடிதம் பதிவு செய்யப்படவில்லை. அதன்பின்னர், சென்னை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையிடமிருந்து மற்றொரு திட்டம் கிடைத்தது; ஆனால் அது தற்போதைய இளைஞர் விடுதி விதிகளின் கீழ் வரவில்லை.
இளைஞர் விடுதி விதிகளின்படி, ஒவ்வொரு இளைஞர் விடுதியும் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட முழுநேர மேலாளரால் (manager) நிர்வகிக்கப்பட வேண்டும்; அவருக்கு உதவியாளராக ஒரு காப்பாளர் (warden) இருப்பார். மேலாளர் இல்லாதபோது, மாவட்ட இளைஞர் அதிகாரி பொறுப்பாளராக செயல்படுவார். தற்போது, திருச்சி இளைஞர் விடுதி மாவட்ட இளைஞர் அதிகாரியால் பராமரிக்கப்படுகிறது. இளைஞர் விடுதி விதிகளின் கீழ் அன்றாட பராமரிப்பிற்கு தனியாக நிதி வழங்கப்படுவதில்லை.
ஆனால், முன்பு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாததால், இளைஞர் விடுதி விதிகளின்படி அமைச்சகம் புதிதாக நிதி உதவியை வழங்குவதை பரிசீலிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் விடுதியை மீண்டும் புனரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவது, திருச்சியின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு சூழலை பெருமளவு மேம்படுத்தும். நாட்டின் பல நகரங்களில் உள்ள இதுபோன்ற இளைஞர் விடுதிகள், குறைந்த செலவில் தங்கும் வசதி, அறிவு மற்றும் பண்பாட்டு பரிமாற்றம், விளையாட்டு மற்றும் சமூக இணக்கத்திற்கு பங்களிப்பு செய்து வருகின்றன.
திருச்சியிலும் இதேபோன்று இவ்விடுதி மீண்டும் உயிர்பெற வேண்டும் என்பதே துரை வைகோ வின் தீவிர விருப்பமாகும்.
இதற்காக, மத்திய பொதுப்பணித்துறை (Central PWD) அதிகாரிகளிடம், இளைஞர் விடுதியை புனரமைப்பதற்கு புதிய நிதி மதிப்பீட்டை உடனடியாக தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார. இந்த மதிப்பீட்டைப் பெற்றவுடன், ஒன்றிய அமைச்சரை சந்தித்து, இதற்கான கோரிக்கையை முன்வைத்து, திருச்சி இளைஞர் விடுதியை மீட்டெடுக்க உறுதியுடன் பணியாற்றுவேன் என்று செய்தியாளர்களிடையே கூறினார் துரை வைகோ எம்பி..
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், திருச்சியில் இளைஞர் விடுதி மீண்டும் உயிர்பெற வேண்டும் என்பதே தனது இலக்கு. அது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கூறினார்..



